முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது வீடாக கருதப்படுவது மதுரை அடுத்து அமைந்துள்ள திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். மலையில் அமைந்துள்ள இந்த பழமை வாய்ந்த கோவிலில்தான் முருகப் பெருமான் தெய்வயானையை திருமணம் செய்து கொண்டதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஒவ்வொரு பௌர்ணமி நாட்களிலும் பக்தர்கள் இந்த மலையை வலம் வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் வெகு விமர்சியாக கொண்டாடப்படும் ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி வலம் வந்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது திருப்பரங்குன்றம் மலை ஒரு சிவலிங்கம் போலவும், அதன் சிகரப் பகுதியில் பௌர்ணமி நிலவு தோன்றியது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளது. சிவபெருமான் பிறை நிலவை தன் முடியில் சூடி இருப்பார். ஆனால் முழு நிலவையும் சூடி இருப்பதுபோல் இருந்த அதிசய காட்சியை கண்டு மெய் சிலிர்த்து நின்றோம் என்று பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பௌர்ணமியை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்ற நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.