கரூர் மாவட்டம் பரமத்தியைச் சேர்ந்த கருணாநிதி – நிர்மலா என்கிற தம்பதியின் மகன் பார்த்திபன். கொங்குநாடு மக்கள் எழுச்சி பேரவை பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருவாதாகவும், அரசுப் பணியில் இருப்பதாகவும்,
சினிமா எடுப்பதாகவும் எனக் கூறி பல பெண்களை திருமணம் செய்து பணம், நகை வாங்கி ஏமாற்றியுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாரூரைச் சேர்ந்த ஒரு பெண், “கடந்த 2019 ம் ஆண்டு பொள்ளாச்சியில் வைத்து திரைப்படம் எடுப்பதற்காக நேர்காணல் செய்தார். அப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். மயக்கம் தெளிந்ததும், காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு திருமணம் செய்தார். சில நாள்கள் தனிக்குடித்தனம் இருந்தோம்.
திடீரென ஒரு நாள் பார்த்திபன் ஊருக்கு செல்வதாக கூறி சென்றார். அவர் வீடு திரும்பவில்லை. அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோது வேறு ஒரு பெண் எடுத்துத் தான் பார்த்திபனின் மனைவி என்று கூறினார். அப்போதுதான் அவர், இதேபோல பல பெண்களை ஏமாற்றியது தெரியவந்தது.” என்றார்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு பெண், “கடந்த 2020 ம் ஆண்டு என்னை திருமணம் செய்து கொண்டார். சிறிது காலம் என்னுடன் வசித்த பார்த்திபன், பணி நிமித்தமாக வெளியூர் செல்வதாக கூறுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். கடந்த ஓராண்டாக எந்தத் தொடர்பும் இல்லை.
விசாரித்தபோதுதான், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. என்னைப் போல பல பெண்கள் திருமணம் செய்து பணம் மற்றும் நகை வாங்கி மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்.” என்றார்.
இந்த மோசடியில் பார்த்திபனுக்கு அவரின் தாய் மற்றும் தந்தை இருவரும் உடந்தையாக செயல்பட்டதாக புகார் உள்ளது. கடந்தாண்டு வடவள்ளி மற்றும் காட்டூர் காவல்நிலையங்களில் பார்த்திபன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இருப்பினும், அரசியல் செல்வாக்குக் காரணமாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பார்த்திபன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பார்த்திபனிடம் கேட்டபோது, “புகார் கொடுத்த இருவரில் ஒருவர் என் இரண்டாவது மனைவி. அவருக்கும், எனக்கும் விவகாரத்து பெறுவது தொடர்பாக வழக்கு நடந்து வருகிறது. என்னைப் பற்றி தவறான தகவல்களை பரப்பி, பணம் பறிக்க வேண்டும் என்கிற நோக்கில் தவறான தகவலை பரப்பி வருகிறார். இன்னொருவர் நான் திருமணம் செய்து கொள்வதாக இருந்தப் பெண். அவர் கூறியது போல, நான் படவாய்ப்பு தருவதாக எல்லாம் தவறாக நடக்கவில்லை. அவருக்கு சில தவறான தொடர்புகள் இருந்தன. அதனால்தான் அவரைவிட்டு விலகிவிட்டேன். இவர்கள் தான் என்னிடம் நிறைய பணம் வாங்கியுள்ளனர். தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டுகின்றனர். அதுதொடர்பாக நானும் போலீஸில் புகார் அளித்துள்ளேன். எனக்கு ஏற்கெனவே முதல் திருமணம் 2013ம் ஆண்டு நடந்து, 2019ம் ஆண்டு சட்டப்படி விவகாரத்தும் பெற்றுள்ளேன். நான் அவருடன் எடுத்தப் படம், என் சகோதரியுடன் எடுத்தப் படத்தை எல்லாம் பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது நாங்களும் புகார் அளிக்க உள்ளோம்” என்றார்.