ஜோத்பூர்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாட்டின் வரலாற்றை முதலில் படிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார்.
கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கியுள்ளார். இது தொடர்பாக பாஜக விமர்சனங்களை முன் வைத்து வருகிறது. ராகுலின் யாத்திரையால் காங்கிரஸுக்கு எந்த பலனும் கிடையாது.
மாறாக பாஜகவுக்குத்தான் நன்மை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்திருந்தார். “காங்கிரஸ் கட்சி செத்து போச்சு, இதற்கு எப்படி ராகுலால் உயிர் தர முடியும்” என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியிருந்தார்.
ராகுல் காந்தி
அது போல் ராகுலுக்கு கூட்டமே கூடாது என்றும் பாஜக விமர்சித்திருந்தது. யாத்திரைக்கு ராகுல் அணியும் பர்பெர்ரி டீ சர்ட்டுகள் ரூ 41 ஆயிரம் ஆகும் என பாஜக விமர்சித்திருந்தது. இதற்கெல்லாம் காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பாஜக தொண்டர்கள் மத்தியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார்.
நாடாளுமன்றம்
அவர் கூறுகையில், நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஆற்றிய உரையை காஙகிரஸ்காரர்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். இந்தியா ஒரு தேசமே இல்லை என்று ராகுல் கூறியிருந்தார். இதை எந்த புத்தகத்தில் படித்தீர்கள்? லட்சக்கணக்கான மக்கள் வாழும் தேசம் இது. இந்த தேசத்திற்காக பலர் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர்.
பாரதத்தை இணைக்க
தற்போது பாரத்தை இணைக்க என கூறி வெளிநாட்டு உடை அணிந்து ராகுல் காந்தி புறப்பட்டுள்ளார். ஆனால் அவர் இந்திய வரலாற்றைப் படிக்க வேண்டும் என நினைக்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்காக காங்கிரஸால் பாடுபட முடியாது. இந்த யாத்திரை மூலம் சிலரை வேண்டுமானால் திருப்திப்படுத்த முடியும். அது போல் வாக்கு வங்கி அரசியலுக்காகவும் மட்டுமே செயல்பட முடியும் என தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் ராகுல்
கன்னியாகுமரியில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை ராகுல் சந்தித்து பேசினார். அப்போது ஏசு கிறிஸ்து கடவுளின் அவதாரம் என்பது சரியா என ராகுல் காந்தி கேட்டதற்கு ஜார்ஜ் பொன்னையா அவர் உண்மையான கடவுள், சக்தி போன்றது கிடையாது என பதிலளித்துள்ளார். இந்த 13 வினாடி வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்து காங்கிரஸ் எம்பியும் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் ட்வீட்டில் கூறுகையில் பாஜக வெறுப்பு தொழிற்சாலையின் கொடூரமான ட்வீட் ஒன்று பரவி வருகிறது. அந்த ஆடியோவில் பதிவானதற்கும் இதற்கும் தொடர்பே இல்லை என விமர்சித்துள்ளார்.