புதுடெல்லி: தேசியக் கல்விக் கொள்கையில் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. அதில் மாற்றம் செய்ய வேண்டும். அதனால் டெல்லியில் இப்போது அதனை அமல்படுத்துவதற்கு வாய்ப்பு இல்லை என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று டெல்லி ஆசிரியர்கள் பல்கலைக்கழகம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சியில் மணீஷ் சிசோடியா கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “கல்வி சார்ந்த கொள்கைகளை 360 கோண பார்வையுடன் வடிவமைக்க வேண்டும். ஆசிரியர்கள், அவர்களுக்கான பயிற்சியையும் கருத்தில் கொண்டே கல்விக் கொள்கைகள் வடிவமைக்கப்பட வேண்டும். அந்த வகையில் தேசியக் கல்விக் கொள்கை 2020ல் நிறைய மாற்றங்கள் தேவைப்படுகிறது. அதில் சில புள்ளிகள் இணைக்கப்பட வேண்டும். தேசிய கல்விக் கொள்கை 2020ல் மிகப்பெரிய இடைவெளி இருப்பதாக நாங்கள் கண்டறிந்துள்ளோம். அதனால் அதை டெல்லியில் உடனடியாக அமல்படுத்த முடியாது.
டெல்லியில் ஒருவேளை தேசிய கல்விக் கொள்கை 2020ஐ அமல்படுத்துகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய கல்விக் கொள்கையில் கூறியது போல் பாடம் கற்பிக்க ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள். அந்த ஆசிரியர்களின் தகுதி என்னவாக இருக்க வேண்டும் என்பது பற்றி தேசிய கல்விக் கொள்கையில் தெளிவான வழிகாட்டுதல் எதுவுமே இல்லை. டெல்லி ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்தில் எங்களது அரசு அங்கம் வகிக்கிறது. நாங்கள் ஆசிரியர்களை தகுதிப்படுத்த அனைத்து வசதிகளையும் செய்துள்ளோம். தேசியக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கையிலும் அதனை நடமுறைப்படுத்துவதிலும் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன” என்றார்.