தமிழ்நாட்டில், ஆட்சிக்கு வந்த நாள்முதலே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறி வரும் திமுக, அதற்கான முன்னெடுப்பாக சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது. இன்னும் அதற்கான பதில் எதுவும் வரவில்லை. இருந்தும் நீட் தேர்வு குறித்து திமுக, பாஜக இடையே அரசியல் மோதல் போக்கு நிகழ்ந்துகொண்டுதான் வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நீட் தேர்வு குறித்து திமுகவை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
நீட் தேர்வில் வெற்றிபெற்ற டீக்கடைக்காரரின் மகளுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்துவிட்டு பேசிய அண்ணாமலை, “ஆரம்பக் காலத்தில் நீட் தேர்வில் பிரச்னை இருந்தது உண்மை தான். காரணம் தமிழ்நாட்டில் நாம் வைத்திருந்த பாடத்திட்டத்துக்கும், நீட் தேர்வில் அவர்கள் வைத்திருந்த படத்திட்டத்துக்கும் பிரச்னைகள் இருந்தது. ஆனால் அதையெல்லாம் நம்முடைய பாடத்திட்டங்கள் முழுமையாக மாறிய பிறகு இன்றைக்கு நம்முடைய குழந்தைகள் தைரியமாக நீட்-ஐ எதிர்கொள்வதற்குத் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், இங்கு ஆள்கின்ற அரசு, அதிலிருக்கக்கூடிய அமைச்சர்களே நீட்-ஐ எதிர்க்கின்ற காரணத்தினால், இந்த மாணவர்களுக்கிருந்த பயிற்சி முறை, சிறப்பு வகுப்புகள் போன்றவற்றை எடுத்துவிட்டார்கள். இதையெல்லாம் எடுத்துவிட்டு மாணவர்களின் கையையும், கண்களையும் கட்டிப்போட்டுவிட்டு, நீட் தேர்வுக்கு திமுக வேண்டுமென்றே அரசு மாணவ, மாணவிகளை அனுப்பி, அதன்மூலமாக நீட் கஷ்டம், தமிழ்நாட்டுக்கெல்லாம் செட் ஆகாது என்று சொல்லுமளவுக்குச் செய்கிறார்கள்.
இந்தியாவில் எந்தவொரு மாநிலத்திலும், எந்தவொரு முதலமைச்சரும் நீட்-ஐ எதிர்க்காதபோது, தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்கு மட்டும் இங்கு இருக்கின்ற அரசு, உன்னால் முடியாது, உன்னால் முடியாது என்ற வார்த்தையைச் சொல்லிச் சொல்லி, அந்த குழந்தைகள் சமுதாயத்தில் எந்தவொரு சாதனையையும் செய்யமுடியாதபடி, அவர்களுடைய மன தைரியத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நீட் வேண்டாமென்று திமுக சொன்னாலும் நிச்சயமாக நீட் இருக்கும். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. குடியரசுத் தலைவரும் கூட இதை முறைப்படி பார்க்கும்போது, நிச்சயமாக நீட் வேண்டாம் என்று சொன்ன மசோதாவை திருப்பியனுப்பத்தான் போறாங்க” என்று கூறினார்.
மேலும் நீட் தேர்வு தற்கொலை குறித்துப் பேசிய அண்ணாமலை, “இந்த தற்கொலைக்கெல்லாம் காரணமே திமுக தான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இதனை ஆணித்தரமாகச் சொல்கின்றேன். மக்கள் பொறுப்பில் இருக்கக்கூடிய அமைச்சர் பேசக்கூடிய வார்த்தை மாணவர்களுக்கு ஊக்கம் கொடுப்பதுபோல் இல்லை. அடுத்த தற்கொலையைத் தூண்டுவதுபோல் தான் இருக்கிறது. திமுக-வின் அரசியல் இப்படியாகிவிட்டது. ஒரு மரணத்தை வைத்துதான் அரசியல் செய்யவேண்டுமென்று வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையில், நீட் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 33 ஆயிரம் பேர் அதிகம் எனவும், 10 ஆயிரம் பேர் சென்ற ஆண்டை விட அதிகமாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் கூறியிருந்தார்.