புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரியின் 50வது ஆண்டு பொன்விழாவில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியு.யு.லலித், “விரைவில் நீதித் துறையின் அனைத்து இடங்களிலும் பெண்கள் அதிகம் வருவார்கள். இதுவே புரட்சியாகவும், வளர்ச்சியாகவும் அமையும்” என்று கூறினார்.
புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டில் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் 50-வது ஆண்டு பொன்விழாவின் நிறைவு விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் உள்பட ஏராளமான நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக்கல்லூரி மாணவ மாணவிகள், அதிகாரிகள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
விழாவில் சட்டக்கல்லூரியின் பொன்விழா ஆண்டு மலரை தலைமைநீதிபதி யு.யு.லலித் வெளியிட்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றினார். அப்போது, ‘‘புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரி 50 ஆண்டுகள் தனது பணியை சிறப்பாக மேற்கொண்டுள்ளதோடு, பல சட்ட வல்லுநர்களையும் உருவாக்கியுள்ளது. இந்த சட்டக் கல்லூரி அறிவுக்கோயிலில் படித்த 7 பேர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக உள்ளனர். புதுச்சேரி முதல்வர், சட்ட அமைச்சர், இந்தக்கல்லூரி முதல்வர் போன்றவர்களும் இங்கே படித்துள்ளது பெருமைக்குறியது.
சட்டக் கல்லூரிகளில் படிப்பவர்கள், அடிப்படையை இங்கிருந்துதான் கற்கிறார்கள். அதன் பிறகு வாழ்க்கையில் கற்றதைப் பயன்படுத்தி மேன்மை பெருகின்றனர். ஆரம்ப கல்விதான் அடிப்படையை வழங்கும். இங்கு பேசிய புதுச்சேரி ஆளுநர், பெண்கள் இத்துறையில் வளர வேண்டும் என்றார். இந்தியாவில் குறிப்பாக தமிழகம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், ஒடிசா உள்ளிட்ட 5 மாநிலங்களில், கீழமை நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையில் பெண் நீதிபதிகள் அதிகம் உள்ளனர். ராஜஸ்தானில் மொத்தமுள்ள 180 நீதிபதிகளில் 129 பேர் பெண் நீதிபதிகள். அதேபோல் ஒடிசா, ஜார்க்கண்டிலும் அதிகம் உள்ளனர்.
இத்துறையில் முதலில் நான் உச்ச நீதிமன்றத்தில் பெண் நீதிபதியை சந்தித்தேன், பிறகு பல பெண் நீதிபதிகள் அங்கு வந்தனர். விரைவில் நீதித்துறையின், அனைத்து இடங்களிலும் பெண்கள் அதிகம் வருவார்கள். இதுவே புரட்சியாகவும், வளர்ச்சியாகவும் அமையும். அதற்கு இதுபோன்ற கல்லூரிகள் உதவி புரியும் என்றவர், தற்போது கல்லூரி முடித்த குறுகிய காலங்களில் மாணவர்கள் நீதிபதிகளாக பணிகளைத் தொடங்க வாய்ப்பு கிடைக்கிறது. இதனால், சட்டக் கல்லூரிகளில் நீதிமன்றங்களுக்கான பயிற்சியளித்தால், அவர்கள் சிறப்பாக பணிபுரிய ஏதுவாக இருக்கும்’’ என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாட்டைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசுகையில், ‘‘தமிழகத்தில் 5 சட்டப் பல்கலைக்கழகங்களும், 10 சட்டக் கல்லூரிகளும் உள்ளன. அதிலிருந்து ஆண்டுக்கு 1000 மாணவர்கள் படித்து வெளியே வருகின்றனர். புதுச்சேரியில் ஒரு சட்டக் கல்லூரிதான் உள்ளது. ஆனால், 7 நீதிபதிகள் இங்கிருந்து தேர்வாகி வருகின்றனர். மேலும், சட்டப் பல்கலைக்கழகம் தொடங்கினால், பல நீதிபதிகள், சட்ட வல்லுநர்களாக வருவார்கள். புதுச்சேரி சிறிய தென்னிந்தியாவாக திகழ்கிறது. இங்கே தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று தென்னிந்திய மொழிகள் பேசுகின்றனர். கிழக்கிலிருந்து மகான் அரவிந்தர் வருகை தந்தார். இங்குதான் சுப்பிரமணிய பாரதியார், அரவிந்தர் ஆகியோர் சுதந்திர புரட்சியை ஏற்படுத்தினர். புதுச்சேரி ஆன்மிக மையமாகவும், சர்வதேச நகரமாகவும் விளங்குகிறது’’ என்று தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரி பேசும்போது, ‘‘புதுச்சேரி சட்டக் கல்லூரி பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்றிருப்பது பெருமையாகும். சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள 7 நீதிபதிகள் இந்த சட்டக் கல்லூரியில் படித்தவர்கள். ஏற்கெனவே இங்கு படித்த பலரும் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக இருந்துள்ளனர். புதுச்சேரி கல்வி கேந்திரமாக திகழ்கிறது. இங்கு மத்திய சட்டப் பல்கலைக் கழகம் அமைக்கவும் புதுச்சேரி முதல்வர், சட்ட அமைச்சர் ஆகியோர் நடவடிக்கை எடுத்துள்ளதும் சிறந்த செயல்பாடுகளாகும். ஆளுநர், முதல்வர் ஆகியோரின் இந்த சிறந்த முயற்சியைப் பாராட்டுகிறேன்.
இங்கு சட்டப் பல்கலைக்கழகம் அமைந்தால், யூனியன் பிரதேசத்தில் உருவாகும் 2-வது பல்கலையாக அது இருக்கும். ஏற்கெனவே டெல்லியில் சட்டப் பல்கலைக்கழகம் உள்ளது” என்று தெரிவித்தார்.