சென்னை: கமல் நடிப்பில் ஜூன் 3ம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம், திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்துள்ளது.
பல வருடங்களுக்குப் பிறகு திரையரங்குகளில் 100 நாட்கள் சாதனையை விக்ரம் படம் நிகழ்த்திக் காட்டியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த விக்ரம் படத்தில், கமலுடன் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
கோலிவுட் மெகா மஜா
குறும்படங்கள் மூலம் சினிமா பயணத்தை தொடங்கிய லோகேஷ் கனகராஜ், மாநகரம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அடுத்ததாக கார்த்தி நடிப்பில் கைதி படத்தையும் இயக்குகிறார். இரண்டு படங்களுமே இரவின் பின்னணியில், புதுமையான கதைக்களத்துடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மூன்றாவது விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்த லோகேஷ், 4வது படத்தில் இன்னும் ஆச்சரியப்பட வைத்தார். கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சூர்யா, நரேன், காளிதாஸ் ஜெயராம் என ஸ்டார் காஸ்டிங்கிலேயே பிரம்மாண்டத்தைக் காட்டிவிட்டார். இதுவே முதலில் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.
இரவே இவருக்கு துணை
நிழலுலக சாம்ராஜ்யங்களை பின்னணியாகக் கொண்டு ஏராளமான படங்கள் வெளியாகியுள்ள போதும், லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ அவைகளில் இருந்து நிறையவே தனித்துள்ளது. இரவையும் அதன் மறுபக்கங்களில் வாழும் மனிதர்களையும் அல்லது லோகேஷ் தனக்குள் கட்டமைத்துள்ள கற்பனையான இரவுநேர மாயஉலகையும் திரையில் அட்டகாசமாக காட்சிப்படுத்துகிறார். ‘மாநகரம்’, ‘கைதி’ வரிசையில் விக்ரம் திரைப்படமும் அசாத்தியமான அனுபவத்தை ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. பெரும்பாலும் தூங்குவதற்காக மட்டுமே என நாம் நம்பிக்கொண்டிருக்கும் இரவுகள், உண்மையாகவே பல விசித்திரமான பன்முக அடுக்குகளை கொண்டுள்ளன. அவைகளை லோகேஷ் கனகராஜ் வணிக சினிமாவுக்காக வடிவமைத்துக் கொள்கிறார்.
செம்மையாக செதுக்கப்பட்ட திரைக்கதை
மாநகரம் படத்தை தவிர லோகேஷின் மற்ற படங்களில் கதை என்பது கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டதே. அதாவது லாஜிக் இல்லாத ரொம்பவே ஃபேண்டசியான வித்தியாசமான உலகம். கதைகளை வைத்து பாத்திரங்களை தேர்ந்தெடுப்பதை விட, சில கேரக்டர்களின் பின்னணியில் கதையை முடிச்சுப் போடுவது தான் லோகேஷின் தனிரூட். இதே அடிப்படையில் தான் விக்ரம் படத்தின் திரைக்கதையை எழுதியிருப்பார் லோகேஷ். கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், இறுதியாக வரும் சூர்யா, இவர்களின் பாத்திரங்கள் எந்த இடைத்திலும் மையப்புள்ளியில் இணையவே இணையாது. எல்லாமே திரைக்கதைக்குள் செய்யப்பட்ட மாயங்கள் தான் அது.
முதல் பாதியில் அடுத்தடுத்த ட்விஸ்ட்கள்
விக்ரம் படத்தின் கதை முழுக்க முழுக்க இரவுக்குள் அகப்படவில்லை, பல காட்சிகள் இருளைவிட்டு வீரியமாக திரையில் ஜொலிக்கின்றன. அதேநேரம் இரவுகள் தான் ‘விக்ரம்’ படத்தின் கதையை அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு நேர்த்தியாக நகர்த்தியும் செல்கின்றன. போலீஸ் ஆபிஸர் காளிதாஸ் ஜெயராம் கொலையை தொடர்ந்து, அதேபாணியில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் அடுத்தடுத்து 2 கொலைகள் செய்கின்றனர். 3 கொலைகளுக்குமான தொடர்புகள் என்ன?, இந்த கொலைகளை செய்பவர்கள் யார்?, அதன் நோக்கம் என்ன?, ஏன் முகமூடியுடன் கொலைகள் நடக்கின்றன?, இப்படி ஒவ்வொரு முடிச்சுகளையும் ஃபஹத் ஃபாசிலின் அமர் என்ற பாத்திரம் மூலம் ரசிகர்களுக்கு விரிவுரை செய்வதாக நகர்கிறது முதல் பாதி. இப்படியான ட்விஸ்ட்கள் தான், ரசிகர்களை நகர முடியாமல் படத்தில் ஒன்ற வைத்தது.
கேங் வாருக்கு மாறிய இரண்டாம் பாதி
இரண்டாம் பாதி அப்படியே இன்னொரு அனுபவத்தை ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறது. முதலில் பாத்திரங்களின் கூட்டணிகள் மாறுகின்றன, அதாவது கமல் பற்றி துப்பறியும் ஃபஹத் பாசில், இரண்டாம் பாதியில் அவருக்கு ஆதரவாக மாறுகிறார். அதன் நீட்சியாக பெரிய கேங் வார் தொடங்குகிறது. இதன் நடுவே பழைய விக்ரம் படத்தின் பாத்திரங்களையும், ‘கைதி’ -இன் கதையையும் தற்போதைய விக்ரமில் கச்சிதமாகப் பொருத்தி மேஜிக் செய்திருப்பார் லோகேஷ். கதையை பெரிதாக நம்பாமல் பாத்திரங்களையும் திரைக்கதையையும் ரசிகர்களின் பார்வையில் இருந்து நம்பியது, லோகேஷுக்கு சரியாக கை கொடுத்தது.
குழம்பிய ரசிகர்கள், தெளிவுப்படுத்திய ஃப்ளாஷ்பேக்
மேலோட்டமாகப் பார்த்தால் விக்ரம் படத்தின் கதையும் திரைக்கதையும் ரொம்ப புதுசாக தெரியாது தான். போதாக்குறைக்கு முதல் பாதியில் சில காட்சிகளையும் பாத்திரங்களின் பெயர்களையும் நினைவில் வைத்துக் கொள்வது ரொம்பவே கடினம். உதாரணமாக பிரபஞ்சன், ருத்ர பிரதாப், கர்ணன் – விக்ரம் போன்ற இன்னும் சில பெயர்கள் குழப்பமாக இருக்கும். ஆனால், ஒருவகையில் இந்த குழப்பங்களையும் புதிர்களையும் தெளிவுப்படுத்தும் விதமாக தான், 2ம் பாதி திரைக்கதையை அசரடிக்க வைக்கும் வேகத்தில் நகர்த்தியிருப்பார் லோகேஷ் கனகராஜ்.
விக்ரம் மேக்கிங்கில் அதிக கவனம்
கதை சொல்லலில் Detailing செய்யாமல், அதனை காட்சிப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தியிருப்பார் லோகேஷ். அதனால் தான் ‘கே.ஜி.எஃப்’ போன்ற லாஜிக் இல்லாத படமாக இருந்தாலும், அதைவிடவும் ‘விக்ரம்’ பலமடங்கு அசுர பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது. இந்த வெற்றிக்காக ஒட்டுமொத்த படக்குழுவும் கடுமையாக உழைத்துள்ளதை மேக்கிங்கில் பார்க்க முடிகிறது. க்ரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு, பிலோமின் ராஜ்ஜின் எடிட்டிங், சதீஷ் குமாரின் ஆர்ட் ஒர்க், அன்பறிவ் மாஸ்டர்களின் ஆக்சன் எல்லாம் காட்சிக்கு காட்சி மிரட்டுகின்றன. அதேபோல், அனிருத்தின் பின்னணி இசை திரைக்கதையின் வேகத்துக்கு நச்சென்று நியாயம் சேர்த்தது.
மல்டி ஸ்டார்களின் மாஸ் பெர்ஃபாமன்ஸ்
கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் என பெரிய கூட்டணியில் உருவாகும் போது, யாருடைய பாத்திரம் வலுவில்லாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கும் இடமில்லாமல் கமல் தொடங்கி ஏஜெண்ட் டினா வரை அத்தனை பாத்திரங்களையும் அதன் வீரியத்துக்கு ஏற்ப பயன்படுத்தியிருப்பார் லோகேஷ். கமலின் நடிப்பு பற்றியெல்லாம் சொல்லவே வேண்டாம். சில காட்சிகளில், குறிப்பாக முதல் பாதி முடியும் போது வரும் பைக் சீன் – இது ஆக்சன் வகையறா, காளிதாஸ் ஜெயராம் இறந்த வீட்டில், அவரது சடலத்தை சுற்றிலும் ஒப்பாரி வைப்பவர்களை கையெடுத்து கும்பிடும் காட்சி – இது எமோஷனல் வகையறா, இப்படி சீன் பை சீன் ரசிகர்களின் கண்களை அகலவிடாமல் அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டேயிருப்பார்.
கமலைப் போல சரிசமமான வாய்ப்பு
அதேபோல், ஃபஹத் பாசிலுக்கும் விஜய் சேதுபதிக்கும் பல தரமான காட்சிகளைக் கொடுத்து மாஸ் காட்ட சரிசமமாக வாய்ப்பு கொடுத்திருப்பார் கமல். பொதுவாக கமல் படங்களில் வில்லனுக்கு செம்ம வெயிட்டேஜ் இருக்கும். அதிலும் கூட ‘தேவர் மகன்’, ‘குருதிப் புனல்’ போன்ற படங்களில் நாசருக்கு மட்டுமே அந்த வாய்ப்புகள் கிடைத்துள்ளது. அதன்பின்னர் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு அப்படியொரு வாய்ப்பு கிடைத்துள்ளது, அதை விஜய் சேதுபதியும் சரியாக பயன்படுத்தியிருப்பார். வில்லன் என்றால் சிக்ஸ்பேக்லாம் தேவையில்லை என, ரகுவரனுக்குப் பிறகு விசித்திரமான உடல்மொழியில் வெறித்தனமாக நடித்திருப்பார்.
சீக்ரெட் ஏஜெண்டாக மிரட்டிய ஃபஹத் பாசில்
விக்ரம் படத்தின் இன்னொரு மிகப் பெரிய பலம் ஃபஹத் ஃபாசில். கருணையே உருவமாக சிரித்தபடியே கேமராவில் முகம் காட்டும் ஃபஹத், அடுத்த அரை நொடிக்குள் கண்களுக்குள் அப்படியொரு குரூரத்தை தீயாக கொட்டித் தீர்க்கிறார். இதெல்லாம் எப்படியென யோசிக்கும் முன்பே, சிங்கிள் டேக்கில் ஒரே போடாய் பொளந்துகட்டுகிறார். அது கண்களா அல்லது ஏதேனும் மாய கலைகள் நிறைந்த பொக்கிசமா என கண்டுபிடிக்க முடியாதது. செம்பன் வினோத் உடனான காட்சிகளில் ஃபஹத் அடித்து துவம்சம் செய்திருப்பார்.
விமர்சனங்களை சந்தித்த வன்முறைக் காட்சிகள்
பக்காவான கமர்சியல் படமாக விக்ரம் இருந்தாலும், இதில் சில குறைகளும் இருக்கின்றன, ஹீரோயிசத்துக்காக மாற்றி மாற்றி துப்பாக்கிகளால் குண்டு மழை பொழிவதும், தலை துண்டித்து பேரானந்தம் கொள்வதும் குழந்தைகளையும் இளைஞர்களையும் என்ன மாதிரியான மனநிலைக்கு கொண்டு செல்லும் என்பதை, படக்குழு சிந்திக்கவே இல்லை. இது சினிமாவுக்கான கற்பனையான உலகம் தான் என லோகேஷ் கனகராஜ் விளக்கம் கொடுத்தாலும், இன்றைய சமூகச் சூழல் அதற்கு ஏதுவானதாக இல்லை என்பதே உண்மை. இதுபோன்ற விமர்சனங்களையும் கடந்து விக்ரம் 100 நாட்கள் சாதனை, 400 கோடி வசூல் தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமாக தான் பார்க்கப்படுகிறது. இருப்பினும் இது தவறான முன்னுதாரணமாக இருந்துவிடக் கூடாது என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.
ஒன்று சேர்ந்தால் நூறு நாட்கள் சாதனை
கமல் தான் நடிக்கும் படங்களின் கதை, திரைக்கதை உட்பட அனைத்து ஏரியாக்களிலும் புகுந்து விளையாடுவார். ஆனால், விக்ரம் படத்தில் லோகேஷ் கனராஜ்ஜை முழுமையாக நம்பியதும், அந்த நம்பிக்கையை சரியாக அவர் பயன்படுத்திக் கொண்டதும் கூட விக்ரம் படத்தின் இந்த வெற்றிக்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது. ஓடிடியில் வெளியான பின்னரும் திரையரங்குகளில் 100 நாட்கள் என்பது, விக்ரம் அணியின் மகத்தான சாதனையே.