ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் படிக்கும் மாணவர்களை தினந்தோறும் பள்ளிக்கு ஏற்றி செல்ல வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில், வழக்கம்போல் இன்று காலை 6 மணி அளவில் சேந்தமங்கலம் பகுதியில் இருந்து பள்ளி மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்ல சேந்தமங்கலத்தில் இருந்து புறப்பட்டது.
பள்ளி வாகனம் புறப்பட்ட 200 மீட்டர் தொலைவில், அரக்கோணம் – காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வரும் பொழுது வண்டியில் திடீரென புகை வந்ததால் ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு, அதிலிருந்து மாணவர்கள் நான்கு பேருடன் உடனடியாக இறங்கியுள்ளார். இறங்கிய டிரைவர் உடனடியாக தீயை அணைக்க வாகனத்தில் இருந்த தீயணைபானை கொண்டு தீயை அணைக்க முயற்சி செய்துள்ளார்.
ஆனால் தீயானது மளமளவென பற்றி எறிய தொடங்கிவிட்டது. பின்பு நெமிலி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக அரக்கோணம் தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
வாகன ஓட்டுநர் புகை வந்தவுடன் துரிதமாக செயல்பட்டு மாணவர்களுடன் கீழே இறங்கியதால் பெரும் பாதிப்பிலிருந்து தப்பினர். இதனால் காஞ்சிபுரம் – அரக்கோணம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்து குறித்து காரணத்தை அறிய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.