புதுடெல்லி: டெல்லியின் சென்ட்ரல் விஸ்டா வளாகத்தில் கடமை பாதையில் (கர்தவ்யா) நேற்று முன்தினம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அந்தச் சிலை உருவானதன் பின்னணியில் உள்ள பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகி உள்ளன. சிலை அமைக்கும் பணி ‘கிரானைட் ஸ்டுடியோ இந்தியா’ என்ற தனியார் நிறுவனத்திடம் அளிக்கப்பட்டது. அவர்கள் சிலை அமைத்த தகவல் குறித்து மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார துறை அமைச்சகத்திடம் விரிவாக கூறியுள்ளனர்.
நேதாஜியின் சிலை அமைக்க பயன்படுத்தப்பட்ட கிரானைட் கல் 30 அடி நீளம், 11 அடி உயரம் மற்றும் 8 அடி அகலத்தில் இருந்தது. அதை ஒரே கல்லாக, தெலங்கானா மாநிலத்தின் வாரங்கல் மற்றும் கமாமிற்கு இடையில் உள்ள பகுதியில் கடினமான முறையில் கவனமாக வெட்டி எடுக்கப்பட்டது. அதற்கு சுமார் 25 நாட்கள் ஆனது. வெற்றிகரமாக ஒரே கல்லாக வெட்டி எடுத்துவிட்டாலும், அதை டெல்லிக்கு கொண்டு வருவது பெரும் சவாலாக இருந்துள்ளது.
அதற்காக மிகச் சிறப்பாக திட்டமிட்டு, 14 எக்ஸல் எனும் 100 மீட்டர் நீளமான வாகனத்தில் 130 முதல் 140 சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன்பிறகு ஜூன் 2-ம் தேதி வாகனத்தில் கல் ஏற்றப்பட்டு 1,665 கி.மீ. தூரத்தை 12 நாட்களில் கடந்து கிரானைட் கல் டெல்லி வந்து சேர்ந்தது. இந்த வகை மோனோலித்தின் கிரானைட் கல், உலகின் மிகவும் கடினமானதாக கூறப்படுகிறது. அதன்பின், சிலை செய்யும் இடத்துக்கு கொண்டு சென்று கல் இறக்கி வைக்க 3 நாட்களானது.
சுமார் 280 டன் எடையுள்ள இக்கல்லை சிலையாக வடிக்க 26,000 மனித நேர உழைப்பு செலவிடப்பட்டுள்ளது. 26 அடி உயர நேதாஜி சிலையை வடிவமைக்கும் தலைமை சிற்பியாக அருண் யோகிராஜ் என்பவர் இருந்துள்ளார். பிரம்மாண்டமான சிலையாக வடிக்கப்பட்ட பின் அதன் எடை 65 டன்னாக இருந்தது. சிலையை வடிக்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தினாலும் பாரம்பரிய முறையில் சிற்பிகள் கைகளாலேயே செதுக்கி சிலையை வடித்துள்ளனர். அதற்காகவே அடுத்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி சிற்பிகளை அவர்கள் குடும்பத்தினரைப் பிரதமர் மோடி நேரில் சந்தித்து கவுரவிக்க உள்ளார்.
தற்போது சுபாஷ் சந்திர போஸுக்காக உள்ள சிலைகளில் உயர்ந்ததாகவும், பிரம்மாண்ட மானதாகவும் டெல்லியில் இந்த சிலை அமைந்துள்ளது. இதைப் பாராட்டி புரட்சியாளர் நேதாஜியின் மகள் அனிதா போஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். தற்போது ஜெர்மனியில் வாழும் பொருளாதார நிபுணரான அனிதா போஸ், அங்கிருந்து தனது வாழ்த்து செய்தியையும் அனுப்பியுள்ளார். மேலும், ஜப்பானின் டோக்கியோவின் ரென்கோஜி கோயிலில் வைக்கப்பட்டுள்ள நேதாஜியின் அஸ்தியை இந்தியா கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடி திறந்து வைத்த நேதாஜி சிலையின் பின்னணியில் வாக்கு வங்கி அரசியல் இருப்பதாக கூறப்படுகிறது. நேதாஜியை தொடர்ந்து காங்கிரஸ் புறக்கணித்து வருவதாகப் புகார் உள்ளது. இதேபோல், மேற்குவங்க மாநிலத்தவரின் நாயகரான நேதாஜி மீது பெங்காலி மொழி பேசும் மக்கள் அதிக மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளனர். இம்மாநிலத்தை திரிணமூல் தலைமையில் ஆளும் முதல்வர் மம்தாவிடம் இருந்து கைப்பற்ற பாஜக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அதன் ஒரு கட்டமாகவே நேதாஜி சிலை திறப்பு என்கின்றனர்.