
பாரதிராஜா டிஸ்சார்ஜ் : படப்பிடிப்பில் பங்கேற்கிறார்
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜாவுக்கு, நீர்ச்சத்து குறைபாடு மற்றும் நுரையீரல் சளி உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு வாரமாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பாரதிராஜா அதன்பிறகு பொது பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இது தொடர்பாக பாரதிராஜாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுடன் இணைந்து பாரதிராஜாவின மகன் மனோஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் “எனது தந்தை பூரண நலம் பெற்று விட்டார். அவரது உடல்நிலை சீராகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறது. சிகிச்சைக்கு பணம் இன்றி தவிப்பதாக வந்த தகவல்கள் தவறானவை” என்று கூறினார்.
ஒரு மாதம் வரை ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறினாலும் பாரதிராஜா இன்னும் சில நாட்களில் படப்பிடிப்புக்கு செல்ல இருக்கிறார். தற்போது அவர் சுசீந்திரன் இயக்கும் வள்ளிமயில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் திண்டுக்கல்லில் நடந்து வருகிறது. படக்குழுவினர் பாரதிராஜாவுக்காக காத்திருக்கிறார்கள். இன்னும் ஒரு சில நாளில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.