மும்பை: கரண் ஜோஹர் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான லைகர் படம் படு தோல்வியை சந்தித்த போது கூட பாய்காட் பாலிவுட் தான் ஜெயித்தது என பொய் பிரச்சாரங்கள் அரங்கேறின.
ஆனால், தற்போது கரண் ஜோஹரின் பிரம்மாஸ்திரம் திரைப்படம் முதல் நாளில் பிரம்மாண்ட வசூல் வேட்டையை நடத்தி இருக்கிறது.
அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பாய்காட் மாயை
பாலிவுட்டில் தொடர்ந்து சொந்த படங்கள் வராமல் தென்னிந்திய படங்களை ரீமேக் செய்து உருவாக்கப்பட்ட படங்கள் படு தோல்வியை சந்தித்து வந்த நிலையில், பாய்காட் பாலிவுட் டிரெண்டானது. அதன் காரணமாகத் தான் அமீர்கானின் லால் சிங் சத்தா, லைகர் படமெல்லாம் தோல்வி அடைந்தது என்பதெல்லாம் ஒரு மாயை தான். உண்மையில், அந்த படங்கள் ரசிகர்களை கவரவில்லை என்பது தான் நிதர்சனம்.
அது காரணமில்லை
அமீர்கானின் படத்தை புறக்கணிக்க முக்கிய காரணமே அவர் இந்து மதக் கடவுள்களை பிகே படத்தில் கேவலமாக சித்தரித்தார் என்று தான். ஆனால், அவருடைய தங்கல் படமே அதன் பிறகு வெளியாகி மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த வரலாறும் இருக்கிறது. அதேபோல பிரம்மாஸ்திரம் படத்துக்கு எதிராக பரப்பப்பட்ட பாய்காட் பாலிவுட் டிரெண்டிங் தற்போது தவிடு பொடியாகி உள்ளது. பாலிவுட் நல்ல படங்களை கொடுப்பதில் கவனம் செலுத்தினால் பாக்ஸ் ஆபிஸ் பிரச்சனை வராது.
ராஜமெளலி புரமோஷன்
தென்னிந்தியா பக்கம் இந்த படத்தை ராஜமெளலியின் படமாகவே இயக்குநர் அயன் முகர்ஜி புரமோட் செய்திருந்தார். கடந்த 2 மாதங்களாக பிரம்மாஸ்திரம் படக்குழுவுடன் ராஜமெளலி பல இடங்களுக்கு பயணம் செய்து படத்தை பற்றியும் அஸ்திரங்கள் பற்றியும் புரிய வைத்திருந்தார். இந்த படத்தில் ராஜமெளலியின் அடையாளம் ஒன்றும் ஸ்பெஷலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
75 கோடி வசூல்
டிராக்கர்களின் கணிப்பு படி முதல் நாள் 40 கோடி வசூல் இந்தியளவில் என்றும் உலகளவில் 55 கோடி வரை தான் வந்திருக்கும் என கணக்கிடப்பட்ட நிலையில், தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பிர்ம்மாஸ்திரம் படம் உலகளவில் முதல் நாளில் மட்டும் 75 கோடி வசூல் செய்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.
அனல் பறக்கும் புக்கிங்
வெள்ளிக்கிழமையை விட சனி மற்றும் ஞாயிறுகளில் படம் சூப்பரா இருக்கு என கிளம்பிய மக்கள் விமர்சனங்களால் அட்வான்ஸ் புக்கிங் அனல் பறக்குதாம். இரண்டே நாட்களில் 100 கோடி பாக்ஸ் ஆபிஸை தாண்டும் நிலையில், முதல் வார முடிவில் மிகப்பெரிய தொகையை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.