லண்டன்-மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகனான மூன்றாம் சார்லஸ், 73, பிரிட்டன் மன்னராக முறைப்படி நேற்று அறிவிக்கப்பட்டார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத், 96, முதுமை காரணமாக சமீபத்தில் மரணமடைந்தார்.இதையடுத்து, பிரிட்டன் அரச குடும்பத்து வழக்கப்படி, லண்டனில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில், வாரிசுரிமை கவுன்சில் எனப்படும் சம்பிரதாய அமைப்பின் கூட்டத்தில், நாட்டின் மன்னராக மூன்றாம் சார்லஸ் நேற்று அறிவிக்கப்பட்டார்.இதன் மூலம் அதிகாரப் பூர்வமாக பிரிட்டனின் மன்னராக சார்லஸ் இருப்பார். அவருக்கு மணிமுடி சூட்டும் விழா, ராணியின் இறுதிச் சடங்குக்குப் பின் நடைபெறும்.
மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு, 19ம் தேதி நடக்கிறது.பிரிட்டன் மன்னரை அறிவிக்கும் நிகழ்ச்சி, முதல் முறையாக ‘டிவி’க்களில் நேரடியாக ஒளிபரப்பாகியுள்ளது. பிரிட்டன் வழக்கப்படி, ‘மன்னரை கடவுள் காப்பாற்றட்டும்’ என, மன்னர் அறிவிப்பு நிகழ்ச்சியில் மதத் தலைவர்கள் குறிப்பிட்டனர்.
இந்நிகழ்ச்சியில், மன்னரின் துணைவரான கமீலா, இளவரசர் வில்லியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ராணியின் மறைவைத் தொடர்ந்து அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்ட கொடிகள், மன்னர் அறிவிப்புக்காக நேற்று மீண்டும் முழு கம்பத்தில் பறக்க விடப்பட்டன. இன்று முதல் ராணியின் இறுதிச் சடங்கு வரை, மீண்டும் அரைக் கம்பத்தில் கொடிகள் பறக்க விடப்படும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement