புதுச்சேரி: “புதுச்சேரியில் பணியாற்றும் வழக்கறிஞர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பொறுப்பேற்கின்ற வாய்ப்பு வழங்க வேண்டும்” என அம்மாநில முதல்வர் ரங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தலைமை செயலர் (பொறுப்பு) பிரசாந்த் கோயல் வரவேற்றார். உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் தலைமை தாங்கினார். உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிறப்பு விருந்தினராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் கலந்து கொண்டு பொன்விழா மலரை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது, ‘‘நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்றார்கள். அதனால் வழக்கறிஞர்களை எப்போதும் நாடு மதிக்கும். நாடு முழுவதும் 18 லட்சம் வழக்கறிஞர்களில் 15 சதவீதம் மட்டுமே பெண் வழக்கறிஞர்கள் உள்ளனர். நீதிபதிகளிலும் பெண்கள் குறைவாகவே உள்ளனர். இளம்பெண்கள் நீதித்துறையில் பணியாற்ற முன்வர வேண்டும். ஏனெனில் ஒரு சமூகத்தில் பெண்களின் நிலையை வைத்துத்தான் அளவீடு செய்ய முடியும் என அம்பேத்கர் தெரிவித்துள்ளார். எனவே நீதித்துறையில் அதிகளவு பெண்கள் வழக்கறிஞர்களாகவும், நீதிபதிகளாகவும் வர வேண்டும்’’என்றார்.
முதல்வர் ரங்கசாமி பேசுகையில், ‘‘புதுச்சேரி கட்டக் கல்லூரி ஒரு சிறிய பள்ளியில் தொடங்கப்பட்டு இன்று சுமார் 28 ஏக்கர் நிலத்தில் சிறந்த கல்லூரியாக நிமிர்ந்து நிற்கிறது. இக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் மாதவன்மேனன் என்னிடம் பேசும்போது, புதுச்சேரியில் ஒரு சட்ட பல்கலைக் கழகத்தை கொண்டு வரலாம் என்று கூறுகிறார். அப்போது, நிச்சயமாக நான் மறுபடியும் முதல்வராக பொறுப்பேற்கும்போது சட்டப் பல்கலைக்கழகத்தை கொண்டுவருவேன் என்றேன். இப்போது சட்டப் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக 26 ஏக்கர் நிலம் அரசு மூலம் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் சட்ட பல்கலைக்கழகம் தொடங்கப்படும். சட்டப்பல்கலைக்கழகம் தொடங்கினால் புதுச்சேரி மாணவர்களுக்கு இடம் கிடைக்குமா என்ற அச்சம் உள்ளது. புதுச்சேரி மாணவர்களுக்குரிய இடங்கள் நிச்சயமாக கிடைக்கும். அதில் எந்தவித அச்சமும் தேவையில்லை.
இது ஒரு சிறந்த சட்டக் கல்லூரி. இங்கு படித்தவர்கள் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி இருக்கின்றனர். 12 பேர் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகி இருக்கிறார்கள். இதில் தற்போது 7 பேர் நீதிபதியாக பணியாற்றி வருகிறார்கள். இக்கல்லூரிக்கு இதுவே பெரிய உதாரணம். அதுமட்டுமல்லாமல் பல இடங்களில், அரசு மற்றும் தனியார் துறைகளிலும் பணியாற்றி வருகிறார்கள்.
சட்டம் பயின்ற மாணவர்களுக்கு உதவி செய்யும் வகையில் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.9 ஆயிரம் அரசு வழங்கி வருகிறது. அதேபோன்று முதுநிலை பட்டம் படித்த மாணவர்கள் 15 பேருக்கு பதவி வழங்கப்பட்டு மாதம் ரூ.25 ஆயிரம் ஊதியம் கொடுக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் பணியாற்றுகின்ற வழக்கறிஞர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பொறுப்பேற்கின்ற வாய்ப்பு இருந்தால், அதனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். இதனை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும் கவனத்தில் வைத்து கொள்ள வேண்டும். எப்படி புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து கொண்டிருக்கிறதோ, அதேபோல் புதுச்சேரியில் உயர் நீதிமன்ற கிளை வர வேண்டும் என்ற கோரிக்கையும் பல ஆண்டுகளாக இருக்கிறது.
புதுச்சேரி நல்ல கல்வியை கொடுக்கின்ற மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. அதில் சட்டக் கல்லூரியும் இருக்கிறது. இக்கல்லூரியின் தரத்தை உயர்த்துவதற்கும், சட்ட பல்கலைக்கழகம் கொண்டுவருவதற்கும் அரசு முயற்சி மேற்கொள்ளும்’’என்றார்.
இவ்விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய் ஜெ.சரவணன்குமார், செல்வகணபதி எம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சட்டக்கல்லூரி முதல்வர் ஸ்ரீனிவாசன் நன்றி கூறினார்.