பொன்னியின் செல்வனுக்கு அடுத்து வேள்பாரி; இந்த முறை ஷங்கர் – ஹீரோ இவரா… ?

கோலிவுட் வட்டாரம் மட்டுமின்றி, இந்திய சினிமாவிலேயே தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வம்’. மறைந்த பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். நடிகர்கள் ஐஸ்வர்யா ராய், விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் செப்.30ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்களில் வெளியாக உள்ளது. 

இந்த திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா கடந்த செப்.6ஆம் தேதி சென்னையில் மிக விமர்சையாக நடைபெற்றது. ரஜினி, கமல் உள்ளிட்டோர் முதல் பல்வேறு திரைப்பட கலைஞர்கள் அதில் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து, இணையத்தில் வெளியான டிரைலரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

தெலுங்கு திரையுலகில், ராஜ மௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, அதேபோன்று வரலாற்று ரீதியான கதைகளை எடுக்க பலரும் தற்போது முன்வந்துள்ளனர். தமிழ் திரையுலகின் நீண்டகால தாகமாக பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வனை மணிரத்னம் தற்போது நனவாக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து, தற்போது தமிழில் உள்ள வரலாற்று புனைவு கதைகளையும் திரைப்படமாக்க பலரும் முனைப்பு காட்டி வருகின்றனர். 

அந்த வகையில், மக்களவை உறுப்பினரும், எழுத்தாளருமான சு.வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’ நாவலும் திரையேறப்போவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதை பிரம்மாண்ட இயக்குநர் கூறப்படும் ஷங்கர் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வார பத்திரிகை ஒன்றில் தொடராக வந்த போதிலிருந்து தற்போதுவரை வேள்பாரி புத்தகம் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. 

அதை கருத்தில்கொண்டு, வேள்பாரி நாவலை திரைப்படமாகவோ அல்லது வெப்-சீரிஸாகவோ ஷங்கர் படமாக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. வேள்பாரி குறித்த திரைப்படத்தில் ‘பாரி’ கதாபாத்திரத்தில் நடிப்பவர் குறித்து இருவேறு தகவல்களும் வெளியாகியுள்ளன. மதுரையில் நடைபெற்ற ‘விருமன்’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவின்போது, நடிகர் சூர்யா எழுத்தாளர் சு.வெங்கடேசன் உடன் பணியாற்ற உள்ளதாக மேடையில் தெரிவித்திருந்தார். எனவே, ஷங்கர் இயக்கத்தில் முதல்முறையாக சூர்யா ‘வேள்பாரி’ திரைப்படத்தில் இணையலாம் என கூறப்படுகிறது.

மேலும், ஷங்கர் தற்போது ராம் சரணை வைத்து தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் திரைப்படம் ஒன்றை இயக்கிவரும் நிலையில், வேள்பாரியிலும் தமிழ் அல்லாத நடிகரையே தேர்வுசெய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கன்னட சினிமாவில் பெரிய பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக வெளியான கேஜிஎஃப் திரைப்படத்தில் நடித்த யாஷ், வேள்பாரியில் பாரியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சு.வெங்கடேசன் எழுதிய ‘காவல் கோட்டம்’ நாவலை அடிப்படையாக வைத்து இயக்குநர் வசந்தபாலன் ‘அரவாண்’ திரைப்படத்தை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.