புதுடெல்லி: மக்களவை, மாநில பேரவை தேர்தலுக்காக பாஜகவில் ஓரம்கட்டப்பட்ட தலைவர்களுக்கு கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல், குஜராத், இமாச்சல் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநில சட்டசபை தேர்தல் ஆகியன நடைபெற உள்ளதால், கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் பாஜக தலைமை இறங்கியுள்ளது. அந்த வகையில் கட்சிப் பதவியில் இருந்து ஓரம்கட்டப்பட்ட தலைவர்களுக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்ட அறிக்கையில், ‘பாஜகவுக்கு சவாலாக உள்ள மாநிலங்களுக்கு புதிய பொறுப்பாளர்கள் அதிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி – பஞ்சாப் மாநில பாஜக பொறுப்பாளராகவும், திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேப், அரியானா மாநில பொறுப்பாளராகவும், முன்னாள் ஒன்றிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கேரள மாநிலத்தின் பொறுப்பாளராகவும், மகேஷ் ஷர்மா திரிபுரா பொறுப்பாளராகவும், பீகார் முன்னாள் அமைச்சர் மங்கள் பாண்டே மேற்கு வங்க பொறுப்பாளராகவும், பாஜகவின் தொழில்நுட்ப தலைவர் அமித் மாளவியா இணை பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுனில் பன்சால் ஒடிசா மற்றும் தெலங்கானா மாநில பொறுப்பாளராகவும், வினோத் தாவ்டே பீகாருக்கும், லக்ஷ்மிகாந்த் வாஜ்பாய் ஜார்கண்ட்டுக்கும், மூத்த தலைவர் ஓம் மாத்தூர் சட்டீஸ்கருக்கும், சம்பித் பத்ரா வடகிழக்கு மாநிலங்களின் ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் அருண் சிங் மற்றும் மத்திய பிரதேசத்தில் முரளிதர் ராவ் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பொறுப்புகள் வழங்கப்பட்ட பெரும்பாலான தலைவர்கள் கட்சியின் எந்தப் பதவியையும் வகிக்கவில்லை; ஆனால் முன்பு தேர்தல் பொறுப்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.