’மக்கள் தலையில் சுமையை ஏற்றுவதா?’ – மின் கட்டண உயர்வை ரத்துசெய்ய மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

மாதம் ஒருமுறை மின் கணக்கெடுப்பு முறையை அமல்படுத்த வேண்டுமென்றும், மின் கட்டண உயர்வை ரத்துசெய்யவும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்ததாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் திமுகவின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘’தமிழ்நாட்டில் இன்று முதல் மின்சார கட்டணம் ரூ.55 முதல் ரூ.1130 வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்டுக்கு 6 சதவிகிதம் என்ற அளவில் மின் கட்டண உயர்வு இருக்கும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் கட்டணத்தை உயர்த்துகிற நடைமுறை ஏழை, எளிய, நடுத்தர மக்களது வாழ்வையும், சிறு – குறு தொழில்கள், சிறிய நடுத்தர வியாபாரிகள் வாழ்வினையும் மோசமாக்கி விடும் என்பதை தமிழ்நாடு அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மேலும் ஒவ்வொரு ஆண்டும் கட்டணத்தை உயர்த்துகிற நடைமுறை இதுவரை இல்லாதது என்பதையும் கவனப்படுத்துகிறோம்.
அரிசி, கோதுமை உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருட்களின் மீதும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் வரலாறு காணாத அளவில் விலைகள் உயர்ந்துள்ளன. மேலும், பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு, சுங்க கட்டண உயர்வு ஆகியவை சங்கிலித் தொடர் போன்று அனைத்து பொருட்களின் விலை உயர்வையும் வேகப்படுத்திவிட்டது. மோடி அரசின் இத்தகைய நாசகர பொருளாதாரக் கொள்கையை கண்டிக்கும் தமிழ்நாடு அரசு, தன் பங்கிற்கு மின் கட்டணத்தை உயர்த்துவது நியாயமற்ற செயலாகும்.
உத்தேசித்த மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யும், பொதுமக்களும், சிறு-குறு தொழில் முனைவோர்களும் கருத்து கேட்பு கூட்டங்களில் கலந்து கொண்டும், பல்லாயிரக்கணக்கான மனுக்கள் அளித்தும் வலியுறுத்தினர். ஆனால் அவைகளை புறந்தள்ளி ஏற்கனவே உத்தேசித்த மின் கட்டண விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் அறிவிக்கப்பட்டுள்ளது.
image
திமுக தேர்தல் வாக்குறுதியின்படி, மாதம் ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதையும் நடைமுறைப்படுத்தாமல் மீண்டும் பழைய முறையிலேயே 2 மாதங்களுக்கு ஒருமுறைதான் கட்டணம் கணக்கிடப்படும் என்ற அறிவிப்பும் செய்துள்ளது. மின்வாரிய நெருக்கடியை சமாளிக்க அரசியல் கட்சிகள், துறைசார்ந்த நிபுணர்கள், செயல்பாட்டாளர்கள் முன்வைத்துள்ள ஆக்கப்பூர்வமான மாற்று ஆலோசனைகளை செயல்படுத்துவதற்கு மாறாக மக்கள் தலையில் சுமையை ஏற்றுவது அரசுக்கு அவப்பெயரையே உருவாக்கும் என சுட்டிக்காட்டுகிறோம்.
எனவே, ஏழை, எளிய உழைக்கும் மக்களையும், நடுத்தர மக்களையும், சிறுகுறு தொழில்களையும் கடுமையாக பாதிக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துவதோடு, மாதம் ஒருமுறை மின் கணக்கெடுப்பு முறையை அமல்படுத்த வேண்டுமென்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறது’’ என்று தெரிவித்திருக்கிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.