மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு போலி துப்பறியும் நிறுவனத்திடம் பணத்தை இழக்கும் வெளிநாட்டு கணவர்கள்: பெண்களை சீரழிக்கும் நிறுவன ஊழியர்கள்: செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டல்: அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்

திருச்சி: மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு போலி துப்பறியும்  நிறுவனத்திடம் பல லட்சங்களை வெளிநாட்டில் உள்ள கணவர்கள் இழந்து  வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, செல்போனில் வீடியோ எடுத்து  பெண்களை அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் சீரழித்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள்  வெளியாகி உள்ளது.இன்றைய பரபரப்பான உலகில், பணத்துக்கு பின்னே  பெரும்பாலானவர்கள் ஓடிக்கொண்டிருக்கின்றனர். பணம் இருந்தால் எதை  வேண்டுமானாலும் வாங்கிவிடலாம் என்பதை இன்றைய சந்தை பொருளாதாரம் மக்கள்  மனதில் ஆழமாக பதிய வைத்துள்ளது. உள்ளூரில் தகுந்த வேலையோ, தொழிலோ  செய்தாலும் அதில் கிடைக்கும் வருமானத்தைவிட வெளிநாட்டு வேலை, தொழிலில்  கிடைப்பது அதிகம். இதனால், குடும்பத்தை விட்டு பிரிந்து வெளிநாட்டிற்கு  செல்பவர்கள் ஏராளம். இப்படி சென்ற கணவர்களில் சிலர், மனைவியின் நடத்தையில்  சந்தேகம் கொள்கின்றனர்.

இப்படிப்பட்ட கணவர்களுக்காக தமிழகத்தில் பல  நகரங்களில் போலி தனியார் துப்பறியும்நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன.  இப்படிபட்ட போலி தனியார் துப்பறியும் நிறுவனத்தை தொடர்பு கொள்ளும்,  கணவனிடம் முதலிலேயே ஆயிரக்கணக்கில் பணம் கறக்கப்படுகிறது. முதல்கட்டமாக  பணம் கொடுத்தவரின் மனைவி தினமும் எங்கு செல்கிறார். யாரிடம் பேசுகிறார்.  வீட்டிற்கு யார், யார் வந்து செல்கிறார்கள் உள்ளிட்ட விவரங்களை  வெளிநாட்டில் இருக்க கூடிய கணவர்களுக்கு முதலில் கச்சிதமாக  அனுப்புகின்றனர். இதற்கிடையே, வெளிநாட்டில் உள்ளவர்கள், நல்ல வருமானம்  உள்ள நபர்களா, அல்லது சாதாரண சம்பளம் உள்ளவர்களா என்பதை அந்த துப்பறியும்  நிறுவனம் உறுதிப்படுத்தி கொள்கிறது. பின்னர், உங்களது மனைவிகளின்  நடத்தையில் சந்தேகம் இருப்பதாக போலி துப்பறியும் நிறுவனத்தினர்  வெளிநாட்டில் உள்ள கணவர்களிடம் தெரிவிக்கின்றனர்.

முக்கியமாக, உங்களுடைய  மனைவி, வேறொரு நபர்களுடன் கள்ளத்தொடர்பில் உள்ளதாகவும் அவர்களிடம்  கூறுகின்றனர். இதில் அந்த நபர்கள் குறித்த விவரங்களை அறிய வேண்டும்  என்றால், மேலும் பணம் செலுத்த வேண்டும் என்று நைசாக வலை விரிக்கின்றனர்.  ஐயோ என் மனைவிக்கு கள்ளக்காதலனா என்று அதிர்ச்சியில் உறைந்த கணவன் அவர்கள்  கேட்கும் பணத்தை வேறு வழியின்றி ஆன்லைனில் அனுப்பிவிடுகிறார். இதே போல்  தொடர்ந்து, அவர்களிடம் பணத்தை வாங்கிக் கொள்கின்றனர். குறிப்பாக,  மனைவியின் செல்போன் எண்ணையும், அந்தந்த கணவர்களிடம் கேட்டு வாங்கி  கொள்கின்றனர். தொடர்ந்து, போலியாக மார்பிங் செய்து, மனைவி வேறொரு நபருடன்  இருக்கும் சில புகைப்படங்களை கணவர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இதை உண்மை என நம்பும் கணவர்கள், அவர்களது மனைவிகளுடன் தகராறில் ஈடுபடுகின்றனர்.  இதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்படுகிறது. பிரச்னை விஸ்வரூபம் எடுத்து,  இறுதியில் விவாகரத்தில் முடிந்து விடுகிறது. இதுபோன்ற போலி துப்பறியும்  நிறுவனங்களை நம்பி வெளிநாட்டில் உள்ள பலபேர், சந்தேகத்தில் தங்களது  மனைவிகளை இழந்து வருகின்றனர்.

சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட  முக்கிய நகரங்களில் இதுபோன்ற போலி துப்பறியும் நிறுவனத்திடம் வெளிநாட்டில்  உள்ள பலர், அவர்களது மனைவிகளின் நடத்தையில் சந்தேகப்பட்டு லட்சக்கணக்கில்  இழந்துள்ளனர். இந்த விவகாரம் வெளியில் தெரிந்தால் அவமானமாகி விடும்  என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க முன்வரவில்லை. இதனால்  அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது.  மனைவியின் நடத்தையை தினமும்  கண்காணிப்பதற்காக போலி துப்பறியும் நிறுவனத்தை வெளிநாட்டில் உள்ள கணவர்கள்  நாடுகின்றனர். இதை அந்நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் சாதகமாக  பயன்படுத்தி கொள்கின்றனர். சில பெண்களை தொடர்ந்து கண்காணிக்கும் போது,  அவர்கள் வேறொரு நபருடன் தொடர்பில் உள்ளது தெரியவந்தால், அந்த பெண்ணிடம்  வெளிநாட்டில் உள்ள உனது கணவரிடம் கூறி விடுவேன் எனக்கூறி தங்கள் வலையில்  வீழ்த்திவிடும் கேடுகெட்ட செயல்களும் நடக்கின்றன. பின்னர், அந்த பெண்ணுடன்  படுக்கையில் ஒன்றாக இருக்கும்போது செல்போனில் வீடியோ எடுத்து வைத்து  கொள்கின்றனர். அதை காட்டி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் அந்த பெண்ணை கொண்டு  வந்து, தொடர்ந்து மிரட்டி பலாத்காரம் செய்வதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சைபர் கிரைம் அதிகாரி ஒருவர் கூறுகையில், வெளிநாட்டில் உள்ள கணவர்கள், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு போலி துப்பறியும்  நிறுவனங்களை நம்பி, பல லட்சங்களை இழக்கின்றனர். முக்கியமாக, கணவனின்  சந்தேகத்தால், அந்த குடும்பமே சீரழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில்,  பாதிக்கப்பட்டவர்கள் யாரும் புகார் அளிக்க வருவதில்லை. மோசடி வழக்கில்  சிக்கும் நபர்களை விசாரிக்கும்போது, அவர்கள் போலி துப்பறியும் நிறுவனம்  நடத்தி இதே போல் பல பேரிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளது  தெரியவருகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால், அந்த  நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புகார் அளிப்பவர்களின்  ரகசியம் காக்கப்படும் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.