இந்தியத் தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோர் நாட்டின் பல வங்கிகளில் பல்லாயிரம் கோடி கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்குத் தப்பிய ஒடிவிட்டனர். அவர்களை நாடு கடத்தி இந்தியா கொண்டுவர சிபிஐ-யின் நடவடிக்கைகள் தொடர்கின்றன. இது தொடர்பான வழக்குகள் வெளிநாட்டு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. மல்லையாவுக்கு கடன் வழங்கிய 11 வங்கிகளின் கூட்டமைப்பு, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) தலைமையில், மல்லையாவின் வாராக் கடன்களால் ரூ.6,200 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது.
மேலும், மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் (கேஎஃப்ஏ) பல இந்திய வங்கிகளில் வாங்கிய கடன் ரூ.9,000 கோடிகள் எனவும் தெரியவந்திருக்கிறது. கீதாஞ்சலி ஜூவல்லர்ஸ் உரிமையாளர் மெகுல் சோக்சி மற்றும் நீரவ் மோடி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியை ஏமாற்றி, ஒப்பந்தக் கடிதங்களைப் பயன்படுத்தி பண மோசடி செய்து நாட்டை விட்டுத் தப்பிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முன்னதாக ஜூலை மாதம், தப்பியோடிய நீரவ் மோடியின் ரூ.253.62 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்களை மத்திய ஏஜென்சி பறிமுதல் செய்தது. வங்கி மோசடி வழக்கு தொடர்பாகக் குற்றவாளிகளின் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கப்பிரிவு ஏற்கனவே முடக்கியுள்ளது. கடந்த ஜூலை மாதம் ரூ. 2,650.07 கோடி மதிப்புள்ள நீரவ் மோடியின் தங்க நகைகள் மற்றும் வங்கி இருப்புகளை அமலாக்கப்பிரிவு முடக்கும் சொத்துகளுடன் இணைத்திருக்கிறது. இதற்கிடையில் கடன் நிலுவைத் தொகையை ஈடு செய்வதற்காக இவர்களின் சொத்துக்களைக் கையகப்படுத்தும் அமலாக்கத்துறை நடவடிக்கையும் தீவிரமாகத் தொடர்கிறது.
இந்த நடவடிக்கைகள் குறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள், “விஜய், மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோரின் மோசடிகளால் இந்திய வங்கிகளுக்கு ஏறக்குறைய ரூ. 22,858 கோடி இழப்பு ஏற்பட்டது. இவர்கள் மூன்று பேரும் வங்கிகளில் வாங்கிய கடன் மற்றும் அதற்கான வட்டி ஈடு செய்ய இவர்களின் சொத்துக்களைக் கையகப்படுத்தி வருகிறோம். அந்த சொத்துக்கள் கோர்ட்டின் மேற்பார்வையில் ஏலம் விடப்பட்டு, அதில் கிடைக்கும் தொகை சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் வழங்கப்படுகிறது. சமீபத்தில் நடத்திய ஏலத்தில் ரூ. 8,411 கோடி திரட்டப்பட்டது. இதையும் சேர்த்து இதுவரை மொத்தம் ரூ.23,000 கோடிகளை வங்கிகளிடம் ஒப்படைத்துள்ளோம். மேலும் பல சொத்துக்களையும் கையகப்படுத்த நடவடிக்கை தொடர்கிறது” எனத் தெரிவித்திருக்கின்றனர்.