“எதையும் சிறியதாக செய்யமாட்டார், பிரமாண்டமாக செய்வார்” என்று அமைச்சர் பி.மூர்த்தி மகன் பிரமாண்ட திருமண விழாவைப் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டி பேசியுள்ளார்.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூவும், ஆர்.பி.உதயகுமாரும் போட்டி போட்டுக்கொண்டு மதுரை நகரமே குலுங்க குலுங்க பிரமாண்ட விழாக்களை நடத்தி மக்களை அவஸ்தைப்பட வைத்தார்கள். ஒரு கட்டத்தில் இது மக்கள் மத்தியில் வெறுப்பை தான் ஏற்படுத்தியது.
அதற்குப்பின் கோவிட் காலத்தில் பிரமாண்ட விழாக்கள் குறைந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு அரசு விழாக்களும் தி.மு.க நிகழ்ச்சிகளும் நடந்து வந்தது.
இந்நிலையில்தான் அமைச்சர் பி.மூர்த்தி தன் மகன் திருமணத்தை மதுரை நகரமே அதிரும் வகையில் பிரமாண்டமாக நடத்தி முடித்துள்ளார்.
பிரமாண்டமான முறையில் திருமண விழா எடுத்த மூர்த்தியை ஆதரித்து பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
திருமணத்தை நடத்தி வைத்த மு.க.ஸ்டாலின் அப்படி என்னதான் பாராட்டிப் பேசினார். “அமைச்சர் மூர்த்தியின் இல்ல திருமண விழாவில் தலைமை தாங்கி நடத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த விழாவை மணவிழா என்று விளம்பரப்படுத்தாமல் மாநாடு என்று விளம்பரப்படுத்தியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
அவர் கட்சி நிகழ்ச்சி உள்ளிட்ட எதையும் சிறியதாக செய்யமாட்டார். பிரமாண்டமாக நடத்துவார். எதிலும் முத்திரை பதிப்பார். தன் மகன் திருமண விழாவையும் தி.மு.க ஆட்சியின் சாதனைகளை சொல்லும் வகையில் நடத்துகிறார்.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பார்கள். ஆனால், மூர்த்தி ஒரு கல்லில் பல மாங்காய்கள் அடிப்பார். தி.மு.க வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது மூர்த்திக்கு அமைச்சர் பதவி தர முடிவானபோது கோபக்காரராச்சே என்று நான் பயந்தேன். ஆனால், கோபம் இருக்குமிடத்தில்தான் குணம் இருக்கும் என்ற அடிப்படையில் அவருக்கு அமைச்சர் பொறுப்பை கொடுத்தோம். ஆனாலும் அந்த பயம் இருந்தது. ஆனால், பொறுப்பேற்ற பின்பு பொறுமையின் சிகரமாகிவிட்டார். பதவி ஏற்றபின் பத்திரப்பதிவு, வணிகவரித் துறைகளில் நான் எதிர்பார்த்ததை விட மிக சிறப்பாக செயல்ப்பட்டு வருகிறார்.
திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் மணமக்களை வாழ்த்த நான் குறிப்புகளை எடுத்துச்செல்வதில்லை. ஆனால், இந்த திருமண விழாவில் பேசுவதற்காக குறிப்புகளை எடுத்து வந்துள்ளேன். அந்தளவுக்கு மூர்த்தி இந்த துறைகளில் பல சாதனைகளை செய்துள்ளார்.
நிதிப்பற்றாக்குறையால் அரசு தவித்தபோது அவர் வகித்த துறை மூலம் அரசுக்கு 13,913 கோடி ரூபாய் வருவாயை பெற்று தந்திருக்கிறார். பத்திரப்பதிவுத்துறையில் பல புதிய திட்டங்களை கொண்டு வந்தார்.
அ.தி.மு.க ஆட்சியில் நடந்த போலி பத்திரப்பதிவுகளை ஒழிக்கும் வகையில் இந்தியவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகைய சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுள்ளோம்.
மூர்த்தி பெரியதா? கீர்த்தி பெரியதா என்று என்னிடம் கேட்டால் மூர்த்திதான் பெரிதென்று சொல்வேன். அந்தளவுக்கு உழைத்துள்ளார்” என்று பேசினார்.
முதலமைச்சரின் பாராட்டு பி.மூர்த்தியை மகிழ்ச்சிபடுத்தியது மட்டுமல்லாமல், இது போன்ற பிரமாண்ட விழாக்களை தொடர்ந்து நடத்த மற்ற அமைச்சர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் உற்சாகத்தை கொடுக்கும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.