உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி நகரில் ‘Modi@20’ என பெயரிடப்பட்ட புத்தக்கத்தின் வெளியீட்டு விழா இன்று (செப். 10) நடைபெற்றது. இதில், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, விழாவில் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர்,” நாட்டின் பாரமரியத்தின் மீது பெருமிதம் கொள்பவர் மட்டுமல்ல, ‘ஒரே இந்தியா… சிறந்த இந்தியா’ என்ற சிந்தனை உடையவர் தற்போது இந்தியாவிற்கு பிரதமராக கிடைத்துள்ளார்” என பிரதமர் மோடியை புகழ்ந்து பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர்,”முன்பு ஒரு பிரதமர் இருந்தார், அவருக்கு நாட்டின் பாரம்பரியத்தின் மீது எந்த பெருமிதமும் இல்லை. தற்போது, நமது பாரம்பரியத்தை ஒண்றிணைத்து, ஒட்டுமொத்த இந்தியாவையும் ‘ஒரே இந்தியா… சிறந்த இந்தியா’ என மாற்ற வேண்டும் என உறுதியோடு இருப்பவர் பிரதமர் மோடி” என முன்னாள் ஜவஹர்லால் நேருவின் பெயரை குறிப்பிடாமல், அவரை பிரதமர் மோடியுடன் ஒப்பிட்டு முதல்வர் யோகி பேசினார்.
பயங்கரவாதத்தை எவ்வாறு கையாள்வது என்பதில் உலகிற்கு இந்தியா முன்னோடியாக திகழ்கிறது என்று கூறிய அவர், காஷ்மீரில் பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க பிரதமர் மோடி தயங்காமல் செயல்பட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார். இது பிரதமர் மோடியின் தலைமைத்துவத்திற்கான எடுத்துகாட்டு எனவும் புகழாரம் சூட்டினார்.
மேலும் பேசிய அவர்,”சோம்நாத் கோவிலை புனரமைக்க ஜனாதிபதி செல்வதை எதிர்த்த ஒரு பிரதமரை நாம் முன்னர் பார்த்திருப்போம், ஆனால் இன்று அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ஸ்ரீராமர் கோவில் கட்டுமான பணியை பிரதமரே தொடங்கிவைத்ததை நாம் தற்போது பார்த்தோம். இன்று உலகில் மிகவும் பிரபலமான தலைவர்களில் ஒருவர், நமது பிரதமர் என்பதில் நாம் அனைவரும் பெருமிதம் கொள்கிறோம்” என்றார்.
‘Modi@20’ என பெயரிடப்பட்ட அந்த புத்தகம், பிரதமர் நரேந்திர மோடியின் 20 ஆண்டுகால நிர்வாகப் பணியை அடிப்படையாகக் கொண்டது என்றும் சமூகத்தின் பல்வேறு அடுக்குகளைச் சேர்ந்தவர்கள் அதை விவரித்த தகவல்களை தொகுத்து இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
புத்தகம் குறித்து பேசிய முதல்வர் யோகி,”இந்நூலின் இந்தி பதிப்பு இன்று காசியில் வெளியிடப்படுகிறது, இதற்காக காசி மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. ஏறக்குறைய 200 ஆண்டுகள் நமது நாட்டை ஆண்ட இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி, இந்த நிலையை நாம் எட்டியிருக்கிறோம்” என்றார்.