ராகுலின் நடைபயணம் மக்களை ஒருங்கிணைக்கும் – நாராயணசாமி உறுதி

மதுரை மீனட்சியம்மன் கோவிலில் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நாராயணசாமி சாமி தரிசனம் செய்தார். மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்த நாராயணசாமிக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ராகுல் காந்தியின் பாத யாத்திரை எழுச்சியான பாத யாத்திரை. மத்திய பாஜக அரசு மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால் மதக்கலவரம் உருவாக்கி அரசியல் லாபம் பெற நினைக்கிறது. மோடி ஆட்சியில் 23 கோடி பேர் வறுமை கோட்டிற்கு கீழ் சென்றுவிட்டனர். பணக்காரர்களுக்காக மோடி ஆட்சி செய்கிறார். ஏழை, எளிய மக்கள் துன்பப்பட்டு வருகின்றனர். மோடி கொடுத்த வாக்குறுதிபடி 16 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்காமல் வெறும் 16 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது.

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் திவாலாகும் நிலை உள்ளது. இந்திய நாட்டின் அந்நியச் செலவாணி குறைந்து டாலர் மதிப்பு உயர்ந்துவிட்டது. சீனா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளோடு நல்ல உறவில்லாத நிலையை மோடி அரசு உருவாக்கியுள்ளது.

2024ஆம் ஆண்டு தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் வரும். பாஜக அரசு எந்த மாநிலங்களிலும் நேர்மையாக ஆட்சிக்கு வருவதில்லை. மணிப்பூர், மேகாலயா, கர்நாடகா, புதுச்சேரியில்கூட சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்ப்பது, பல ஆயிரம் கோடிகளை கொடுத்து ஆட்சியை கலைப்பது என ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு ஜனநாயக படுகொலையை பாஜக செய்கிறது. ஒட்டுமொத்தமாக மக்கள் விரோத நடவடிக்கையில் பாஜக ஈடுபடுகிறது.

எதிர்க்கட்சி தலைவர்கள் மீது திட்டமிட்டு குறிவைத்து வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளை ஏவி சோதனை நடத்துகின்றனர். அதே எதிர்க்கட்சி தலைவர்கள் பாஜகவில் சேர்ந்தால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

 

ராகுல் காந்தியின் பாதயாத்திரை இந்திய மக்களை ஒன்றிணைத்து மிகப்பெரிய மாற்றத்தை தரும். அண்ணாமலை முழுநேர அரசியல்வாதி கிடையாது. நாடு என்ன வளர்ச்சிப் பாதையில் சென்றுள்ளது. ஏற்கனவே இருந்த திட்டங்களை மோடி மாற்றியமைத்துள்ளார்.

இந்திய நாட்டிற்கு அனைத்தையும் செய்தது காங்கிரஸ் கட்சிதான். திமுக மற்றும் காங்கிரஸை சாடுவதை தவிர அண்ணாமலைக்கு வேறு வேலை கிடையாது. வடமாநிலங்களை வேண்டுமானால் மோடியும், அண்ணாமலையும் ஏமாற்றலாம். ஆனால் தென்மாநிலங்களையும், மக்களையும் பாஜகவால் ஏமாற்ற முடியாது. 

ராகுல் தலைமை பொறுப்பை ஏற்க மாட்டேன் என சொல்லவில்லை. தேர்தல் வரும்வரை பொறுமையாக இருப்போம். ராகுல்காந்தி தலைமை பொறுப்பை ஏற்க தகுதியானவரா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியது மக்களும், காங்கிரஸ் கட்சியினரும்தான். சீமான் இல்லை. சீமான் எங்கள் கட்சியில் வேண்டுமானால் சேர்ந்துவிட்டு பேசட்டும். மோடி இத்தாலி, அமெரிக்காவில் லண்டனில் இருந்து வரும் உடைகளை போடுகிறார். எங்களை விமர்சனம் செய்ய என்ன தகுதி யோக்கிதை பாஜகவுக்கு உள்ளது” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.