திஸ்பூர்: ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருவதை விமர்சித்து கார்டூன் வீடியோ வெளியிட்ட அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவுக்கு, அவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட ட்விட்டை தோண்டியெடுத்து காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.
அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா. சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ட்விட்டரில் கருத்து யுத்தம் நடத்தினார்.
பள்ளிகள் மூடப்பட்டது தொடர்பாக இரு முதல்வர்களும் காரசாரமாக ட்விட்டரில் மோதிக்கொண்டனர்.
கார்டூன் போல சித்தரித்து வீடியோ
இவ்வாறு ஹிமந்த பிஸ்வ சர்மா ட்விட்டரில் தனது அரசியல் கருத்துக்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்த பதிவுகளை பகிர்ந்து பிஸியாக இருந்து வருகிறார். இப்படிதான் அண்மையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை சிறிய கார்டூன் போல சித்தரித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். பின்னணியில் இசையுடன் ஒலிபரப்பான இந்த வீடியோவில் ராகுல் காந்தியின் அரசியல் நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியில் முடிவது என்பதை சித்தரிப்பதாக இருந்தது.
ராகுல் காந்தி பிரதமராக வருவார்
ஹிமந்த பிஸ்வ சர்மாவின் இந்த பதிவு பாஜகவினரால் அதிக அளவில் பகிரப்பட்டது. காங்கிரஸ் கட்சியினரும் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கமெண்ட்டுகளும் போட்டு வந்தனர். இந்த நிலையில், ஹிமந்த பிஸ்வ சர்மாவின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. அதாவது கடந்த 2010 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் ஹிமந்த பிஸ்வ சர்மா இருந்த போது, ராகுல் காந்தி சரியான தருணத்தில் நாட்டின் பிரதமராக வருவார் என்று பதிவிட்டு விருந்தார். சுமார் 12 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த ட்விட்டை தோண்டியெடுத்த காங்கிரஸ், ஹிமந்த பிஸ்வ சர்மாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது.
யார் ஏமாற்றுகிறார்கள்?
காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் ஹிமந்த சர்மாவின் இருவேறு விதமான கருத்துக்களையும் பதிவிட்டு விமர்சித்துள்ளார். இந்த பதிவில், ”நரேந்திர மோடி ஜி, யார் ஏமாற்றுகிறார்கள்?.. ஹிமந்த பிஸ்வ சர்மாவின் கடந்த காலங்கள் தெளிவாக காட்டுகிறது… எனவே அவரிடம் எச்சரிக்கையாக இருங்கள்… அவர் ஏமாற்றுவதற்கு நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும்?” என பதிவிட்டுள்ளார்.
ஹிமந்த பிஸ்வ சர்மா
அசாம் முதல்வராக உள்ள ஹிமந்த பிஸ்வ சர்மா காங்கிரஸ் கட்சியில் 1991- ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை இருந்தார். அசாமில் காங்கிரஸ் மூத்த தலைவர் தருண் கோகாயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2015 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.