மதுரை: “ராகுல் காந்தியின் நடைபயணத்தால் 2024 மக்களவைத் தேர்தலில் மாற்றம் வரும்” என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாரயணசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று சுவாமி தரிசனம் செய்ய புதுச்சேரி முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நாராயணசாமி வருகை தந்தார். அவருடன் புதுச்சேரி மாநில வைத்திலிங்கம் எம்.பி, புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியம், முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் ஆகியோர் உடன் வந்திருந்தனர். அவர்களை மதுரை மாநகர மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் அக்கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.
மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “மத்தியில் பாஜக அரசு மதம், இனத்தின் பெயரால் மதக் கலவரம் உருவாக்கி அரசியல் லாபம் பெற நினைக்கிறது. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால் 16 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்போம் என்றார், ஆனால், 16 லட்சம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு அளித்துள்ளனர். ஆனால், 23 கோடி பேர் வறுமைக்கோட்டிற்குகீழ் சென்றுவிட்டனர். மோடி பணக்காரர்களுக்காகவே ஆட்சி செய்கிறார். ஆனால் ஏழை, எளிய மக்கள் துன்பப்படுகின்றனர். இந்திய நாட்டின் அந்நியச் செலவாணி குறைந்து டாலர் மதிப்பு உயர்ந்துவிட்டது. நேபாளம், இலங்கை, சீனா, பாகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளுடனான நல்லுறவை மோடி அரசு கடைபிடிக்கவில்லை.
பாஜக அரசு எந்த மாநிலங்களிலும் நேர்மையாக ஆட்சிக்கு வருவதில்லை. மணிப்பூர், மேகலாயா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் கூட பல ஆயிரம் கோடிகள் கொடுத்து எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, இருக்கும் ஆட்சியை கவிழ்த்து, புதிய ஆட்சியை அமைத்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்ப்பதன் மூலம் ஜனநாயக படுகொலையை பாஜக அரசு செய்து வருகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் மீது திட்டமிட்டு குறிவைத்து வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ ஏவி விட்டு சோதனை நடத்துகின்றனர்.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணப் பாத யாத்திரை மக்களிடையே மிகப் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடைபயணத்தால் வரும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மிகப் பெரிய மாற்றம் வரும்” என்றார்.