ஜெய்பூர்: காங்கிரஸ் முக்கியத் தலைவரான ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தை விமர்சித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “ராகுல் முதலில் நாட்டின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பாஜக பூத் அளவிலான நிர்வாகிகளிடம் பாஜகவின் முதன்மைத் தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா உரையாற்றினார். அப்போது அவர், “பாரத் ஜோடோ யாத்திரைச் செல்லும் ராகுல் காந்தி வெளிநாட்டு பிராண்ட் டி-ஷர்ட் அணிந்து கொண்டு யாத்திரை செல்கிறார். இந்தியாவை ஒன்றிணைப்பதற்காக இந்திய ஒற்றுமை பயணம் போவதாக சொல்லும் அவர், முதலில் தேசத்தின் வரலாற்றை நன்றாக தெரிந்துகொள்ள வேண்டும்.
நான் காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கும், ராகுல் காந்திக்கும், அவர் நாடாளுமன்றத்தில் பேசியதை நினைவுபடுத்த விரும்புகிறேன். நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் பாபா, இந்தியா ஒரு தேசமே இல்லை என்றார். நீங்கள் எந்தப் புத்தகத்தில் இதைப் படித்தீர்கள்? லட்சக்கணக்கான மக்கள் உயிர்த் தியாகம் செய்து உருவாக்கிய தேசம் இது. ராகுல் காந்தி இந்தியாவை ஒன்றிணைப்பதற்காக யாத்திரை போவதாக சொல்கிறார். முதலில் அவர் தேசத்தின் வரலாற்றை தெரிந்து கொள்ளட்டும்.
வளர்ச்சிக்காக காங்கிரஸ் கட்சி வேலை செய்வதாக சொல்கிறது. அவர்கள் வாக்கு வங்கி அரசியலுக்காகவும், சமாதானப்படுத்துவதற்காகவும் மட்டுமே வேலை செய்கிறார்கள்” என்று அமித் ஷா பேசினார்.