புதுடெல்லி: சட்ட விரோத கடன் செயலிகள் மீது நடவடிக்கை எடுக்க ஒன்றிய நிதி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். செல்போன் மூலமாக கடன் பெறுவதற்காக பல புதிய செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த செயலிகள் சட்ட விரோதமாக செயல்பட்டு வருகின்றன. இது போன்ற சட்டவிரோத கடன் செயலிகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தன. இந்நிலையில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று உயர்மட்ட கூட்டம் நடந்தது. இதில், சட்ட விரோத கடன் செயலிகளை தடை செய்ய பல நடவடிக்கைகள் எடுப்பது பற்றி அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். அதன்படி, ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்படும் கடன் செயலிகள் மட்டுமே இனி ஆப் ஸ்டோரில் இருக்க அனுமதிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இது போன்ற செயலிகள் பயன்படுத்தும் பினாமி வங்கி கணக்குகளை முடக்க ரிசர்வ் வங்கிக்கு அமைச்சர் அறிவுரை அளித்துள்ளார்.
