'வாரிசு' படத்தை விட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தும் 'விஜய் 67'
தமிழ் சினிமாவின் வசூல் நடிகர்களில் தற்போது முதன்மையானவராக இருப்பவர் விஜய். அவருடைய படங்கள் தொடர்ச்சியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. விஜய் தற்போது தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. விஜய்யின் 66வது படமான இப்படம் ஏற்படுத்தும் பரபரப்பை விட அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள 67வது படம் பற்றிய தகவல்கள் திரையுலகத்தில் பரபரபப் ஏற்படுத்தி வருகிறது.
பொதுவாக விஜய் படங்களுக்கான பட்ஜெட் 150 கோடி முதல் 200 கோடி வரையில்தான் இருக்கும். 'மாஸ்டர்' வெற்றிக்குப் பிறகு விஜய் வாரிசு படத்திற்காக 120 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்ற ஒரு தகவல். அதனால், விஜய்யின் 67வது படத்தின் பட்ஜெட் 250 கோடி வரை போகலாம் என்று சொல்லப்படுகிறது.
எந்த ஒரு தயாரிப்பாளரும் படங்களைத் தயாரிக்க பைனான்ஸ் வாங்குவார்கள். ஆனால், விஜய் 67க்காக பைனான்ஸ் வாங்காமலேயே தயாரிப்பாளர் தயாரித்து விடுவார் போலிருக்கிறதே என பேசிக் கொள்கிறார்கள். அதாவது வெளியீட்டிற்குப் பிறகான வியாபாரத்திற்கு இப்போதே 'டிமாண்ட்' ஆக உள்ளதாம்.
ஒரு காலத்தில் ரஜினிகாந்தின் படத்திற்குத்தான் அப்படி நடந்தது. அவரது பட அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே தமிழகம் முழுவதும் உள்ள வினியோகஸ்தர்கள் தயாரிப்பாளரைத் தேடிச் சென்று அட்வான்ஸ் கொடுத்துவிடுவார்கள். அது போல இப்போது விஜய் 67 படத்திற்காக வியாபாரப் போட்டி கடுமையாக இருக்கிறதாம்.
ஓடிடி உரிமைக்காக 100 கோடிக்கு மேலும், சாட்டிலைட் உரிமைக்காக 100 கோடி வரையிலும், ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழி உரிமைக்காக 50 கோடிக்கு மேலும் தரத் தயாராக இருக்கிறார்களாம். அதற்கெல்லாம் சரி என தயாரிப்பாளர் ஒப்பந்தம் போட்டால் அவரது சொந்த முதலீடு இல்லாமல், பைனான்ஸ் வாங்காமல் படத்தை முடித்துவிடலாம்.
'மாஸ்டர்' படக் கூட்டணி மீண்டும் இணைவது, கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'விக்ரம்' படம் 500 கோடிக்கும் மேல் வசூலித்தது என்பதே அதற்குக் காரணம் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.