விசாரணையை தாமதபடுத்துகின்றனர்; விவாகரத்து கேட்ட நடிகர் – நடிகை தம்பதிக்கு அபராதம்

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நடிகர் அபினவ் மொகந்தி. இவரும் ஒடிசாவை சேர்ந்த நடிகையான வர்ஷா பிரியதர்ஷினியும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அபினவ் மொகந்தி பிஜூ ஜனதா தளம் சார்பில் மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று எம்.பி.யாகவும் உள்ளார்.

இதனிடையே, கணவன் மனைவியான அபினவ், பிரியதர்ஷினி இடையே கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதையடுத்து, இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் அளித்தனர். வரதட்சனை கொடுமை, குடும்ப வன்முறை என பல்வேறு பிரிவுகளில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்தனர்.

மேலும், பிரியதர்ஷினியிடமிருந்து தனக்கு விவாகரத்து கோரி 2020-ம் ஆண்டு அபினவ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு டெல்லி கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர், சுப்ரீம் கோர்ட்டில் தலையீட்டிற்கு பின்னர் இந்த வழக்கு ஒடிசாவின் கட்டாக்கில் உள்ள குடும்பநல கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது.

குடும்ப நல கோர்ட்டில் விவகாரத்து விசாரணை பல மாதங்களாக நடந்து வந்த நிலையில் விசாரணைக்கு அபினவ் மற்றும் பிரியதர்ஷினி சரிவர ஒத்துழைக்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுத்தவண்ணம் இருந்தன.

விவாகரத்து ரத்து தொடர்பான மனுவில் திருத்தங்கள் செய்யவேண்டும் என இருவரும் மாறி மாறி கூடுதல் அவகாசங்களை கேட்டு வருகின்றனர். அதேவேளை, ஒருவர் மீது ஒருவர் மீண்டும் போலீசில் புகார் கொடுத்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று கட்டாக் குடும்ப கோர்ட்டில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விவாகரத்து வழக்கில் சரியாக ஒத்துழைப்பு அளிக்காமல் விசாரணையை தாமதபடுத்துவதாக கூறி எம்.பி.யும், நடிகருமான அபினவ் மொகந்திக்கும் அவரது மனைவியும் நடிகையுமான வர்ஷா பிரியதர்ஷினியும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.