விஞ்ஞானிகள் மற்றும் அவர்களின் கண்டுபிடிப்புகளை நாம் கொண்டாடும் போது அறிவியல் நமது வாழ்க்கையின் அங்கமாக மாறும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.
குஜராத் மாநிலத்தில், மத்திய, மாநில அறிவியல் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக துவக்கி வைத்தார். கூடியிருந்தவரிடையே உரையாற்றிய பிரதமர், இந்த மாநாட்டின் ஏற்பாடு என்பது அனைவரின் முயற்சி என்பதற்குத் தெளிவான உதாரணம் என்பதை எடுத்துரைத்தார்.
“21 ஆம் நூற்றாண்டு இந்தியாவின் வளர்ச்சிக்கு எரிசக்தி போல அறிவியல் உள்ளது; ஒவ்வொரு பிராந்தியம் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் சக்தியை அது கொண்டிருக்கிறது. தற்போது நான்காவது தொழில் புரட்சியை நோக்கிய இந்தியா முன்னேறிவரும் நிலையில் இந்தத் துறையோடு தொடர்புடைய இந்திய அறிவியல் மற்றும் மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இத்தகைய சூழலில், நிர்வாகம் மற்றும் கொள்கை உருவாக்கத்தில் உள்ளவர்களின் பொறுப்பு கணிசமான அளவு அதிகரித்துள்ளது” என்று பிரதமர் குறிப்பிட்டார்.
தீர்வுகள், வளர்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பின் அடிப்படையாக அறிவியல் உள்ளது என்பததைப் பிரதமர் வலியுறுத்தினார். இந்த உத்வேகத்துடன் இன்றைய புதிய இந்தியா ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் விஞ்ஞான், ஜெய் அனுசந்தன் (ஆராய்ச்சி) ஆகியவற்றுடன் புதிய இந்தியா முன்னேறி வருகிறது என்றும் கூறினார். வரலாற்றிலிருந்து நாம் பாடங்களைக் கற்க வேண்டும் என்று கூறிய பிரதமர், இது மத்திய மாநில அரசுகளுக்கு உதவும் என்றார். கடந்த நூற்றாண்டின் முதல் 10 ஆண்டுகளை நாம் நினைவில் கொண்டால் இந்தக் காலத்தில்
உலகம் எவ்வாறு பேரழிவு மற்றும் சோகத்தைக் கடந்து சென்றது என்பதை அறிய முடியும். ஆனால் இந்த சகாப்தத்தில் கிழக்கு அல்லது மேற்கு என எதுவாக இருந்தாலும் அனைத்து இடங்களிலும் இருந்த விஞ்ஞானிகள் தங்களின் மகத்தான கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டிருந்தனர். மேற்கத்திய நாடுகளில் ஐன்ஸ்டீன், ஃபெர்மி, மாக்ஸ் பிளாங்க், நீல்ஸ் போர், டெல்சா போன்ற விஞ்ஞானிகள் தங்களின் பரிசோதனைகள் மூலம் உலகத்தை வியப்படையச் செய்தனர். இதே காலத்தில் சி வி ராமன், ஜெக்தீஷ் சந்திர போஸ், சத்யேந்திரநாத் போஸ், மேக்நாத் சாகா, எஸ் சந்திரசேகர் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் தங்களின் புதிய கண்டுபிடிப்புகளை முன்னிலைக்குக் கொண்டுவந்தனர் என்று அவர் தெரிவித்தார். கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையேயான வேறுபாட்டை கோடிட்டுக்காட்டிய பிரதமர், நமது விஞ்ஞானிகளின் பணிகளுக்குப் போதிய அங்கீகாரத்தை நாம் வழங்கவில்லை என்றார். நமது விஞ்ஞானிகளின் சாதனைகளை நாம் கொண்டாடும் போது, நமது சமூகம் மற்றும் கலாச்சாரத்தின் பகுதியாக அறிவியல் மாறுகிறது என்பதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
நமது நாட்டு விஞ்ஞானிகளின் சாதனைகளை அனைவரும் கொண்டாட வேண்டும் என்றும் திரு மோடி கேட்டுக்கொண்டார். நமது விஞ்ஞானிகளைக் கொண்டாடுவதற்கு போதிய காரணங்களை நாட்டுக்கு அவர்கள் தந்துள்ளனர் என்றும் பிரதமர் கூறினார். கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் இந்திய விஞ்ஞானிகளின் பங்களிப்பையும் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்திற்கு பங்களிப்பு செய்ததையும் அவர் பாராட்டினார்.
அறிவியல் அடிப்படையில் வளர்ச்சி என்ற சிந்தனையுடன் அரசு பணியாற்றி வருகிறது என்று பிரதமர் திட்டவட்டமாகக் கூறினார். “2014க்குப் பின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் முதலீடு கணிசமான அளவு அதிகரித்து வருகிறது. அரசின் இந்த முயற்சிகள் காரணமாக இந்தியா தற்போது உலகளாவிய புதிய கண்டுபிடிப்பு குறியீட்டுத் தரவரிசையில் 46-ஆவது இடத்தில் உள்ளது. அதேசமயம் 2015ல் இந்தியா 81 வது இடத்தில் இருந்தது” என்று பிரதமர் மேலும் கூறினார். நாட்டில் ஏராளமான காப்புரிமைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை அவர் அங்கீகரித்தார். புதிய கண்டுபிடிப்பு மற்றும் துடிப்பு மிக்க புதிய தொழில் சூழல் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
நமது இளம் தலைமுறையின் டிஎன்ஏ-வில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு ஆர்வம் உள்ளது. இந்த இளைய தலைமுறைக்கு முழு பலத்துடன் நாம் ஆதரவு தருவது அவசியம் என்பதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். இளைஞர்களின் புதிய கண்டுபிடிப்பு உணர்வுக்கு ஆதரவாக ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பு துறையில் புதிய பிரிவுகள் மற்றும் இயக்கங்களைப் பிரதமர் பட்டியலிட்டார். விண்வெளி இயக்கம், தேசிய சூப்பர்கம்ப்யூட்டிங் இயக்கம், செமிகண்டக்டர் இயக்கம், ஹைட்ரஜன் இயக்கம், ட்ரோன் தொழில்நுட்பம் ஆகிய உதாரணங்களை அவர் தந்தார். அதே போல், தாய்மொழியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதன் மூலம் தேசிய கல்விக் கொள்கை இதனை மேலும் ஊக்கப்படுத்துகிறது என்று அவர் கூறினார்.
இந்த அமிர்தக் காலத்தில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பின் உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றுவதற்கு பல முனைகளில் ஒரே நேரத்தில் நாம் பணியாற்ற வேண்டியுள்ளது என்பதைப் பிரதமர் எடுத்துரைத்தார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சியை உள்ளூர் நிலையில் கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பை தங்களின் உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப மேம்படுத்துமாறு மாநிலங்களை அவர் கேட்டுக்கொண்டார். மேலும் மேலும் கூடுதலாக அறிவியல் நிறுவனங்களை உருவாக்குவதற்கு அழுத்தம் கொடுத்தல், மாநில அரசுகளின் நடைமுறைகளை எளிமைப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் புதிய கண்டுபிடிப்பை ஊக்குவிக்க முடியும் என்று பிரதமர் கூறினார். மாநிலங்களின் உயர்கல்வி நிறுவனங்களில் புதிய கண்டுபிடிப்பு ஆராய்ச்சி கூடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார். அறிவியல், புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பாக நவீன கொள்கைகளை ஒவ்வொரு மாநிலமும் வகுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். “அரசுகள் என்ற முறையில் நமது விஞ்ஞானிகளுடன் நாம் ஒத்துழைக்கவும் ஒருங்கிணையவும் வேண்டியுள்ளது; இது நவீனத்துவ அறிவியல் சூழலை உருவாக்கும்.”
தேசிய அளவில் தற்போதுள்ள பல அறிவியல் கல்வி நிறுவனங்கள், தேசிய பரிசோதனைக் கூடங்கள் ஆகியவற்றின் திறன்களையும் நிபுணத்துவத்தையும் முழு அளவில் மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். அறிவியல் சார்ந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் நிபுணத்துவத்தின் அதிகபட்ச பயன்பாட்டிற்கு, நமது அறிவியல் தொடர்பான நிறுவனங்கள் தகவல் பகிர்வதில் தயக்கம் காட்டும் மனநிலையில் இருந்து அவற்றை நாம் வெளியே கொண்டுவர வேண்டும் என்றும் அவர் கூறினார். அறிவியல் மேம்பாட்டு நிகழ்வுகளை அடித்தள நிலையில் கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். அறிவியல் பாடத் திட்டத்தில் நல்ல நடைமுறைகளையும் சிறப்பு அம்சங்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு மாநில அறிவியல் துறை அமைச்சர்களுக்கு அவர் யோசனை தெரிவித்தார்.
இந்த மத்திய மாநில அறிவியல் மாநாடு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் என்று தமது உரையின் நிறைவில் நம்பிக்கை தெரிவித்த பிரதமர் அறிவியல் முன்னேற்றத்தை நோக்கி நாடு செல்வதற்கான உறுதியையும் ஏற்படுத்தும் என்றார். அறிவியல் தொழில்நுட்பத் துறையில் எந்த ஒரு வாய்ப்பையும் யாரும் நழுவ விடக்கூடாது என்பதையும் பிரதமர் வலியுறுத்தினார். வரும் 25 ஆண்டுகள் இந்தியாவுக்கு முக்கியமானவை என்றும் இந்தியாவிற்குப் புதிய அடையாளத்தையும் வலுவையும் பலத்தையும் தீர்மானிப்பதாக இவை இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார். பங்கேற்பாளர்கள் இந்த மாநாட்டில் கற்றுக்கொண்டதை தங்களின் மாநிலங்களுக்கு கொண்டு சென்று தேசக் கட்டமைப்புக்கு பங்களிப்பு செய்ய வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.