விடைபெற்றார் விநாயகர்: மும்பையில் லட்சக்கணக்கான விநாயகர் சிலைகள் இரண்டாவது நாளாகக் கடலில் கரைப்பு!

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கியது. மும்பையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்திருந்தனர். இது தவிர கணபதி மண்டல்கள் தரப்பில் பல அடி உயரத்தில் தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் பந்தல்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டு வந்தது.

விநாயகர் சதுர்த்தி விழாவின் இறுதி நாளான ஆனந்த சதுர்த்தியையொட்டி நேற்று காலையிலேயே ராட்சத விநாயகர் சிலைகள் ஊர்வலமாகக் கடலுக்கு எடுத்துச்செல்லப்பட்டன. பொது மக்கள் தங்களது வீடுகளில் பிரதிஷ்டை செய்திருந்திருந்த விநாயகர் சிலைகளைக் கடல்கள் மற்றும் செயற்கையாக உருவாக்கப்பட்ட குளங்களில் கரைத்தனர். மும்பையில் கிர்காவ் சவுபாத்தி மற்றும் தாதர் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இதற்காக மும்பை மாநகராட்சி நிர்வாகம் பிரத்யேக ஏற்பாடுகளைச் செய்திருந்தது. இரண்டு கடற்கரையிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைத்துச் சிலை கரைப்பை மும்பை போலீஸார் ஒழுங்குபடுத்தினர். பாதுகாப்பு பணியில் 14,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

கிர்காவ் கடற்கரை

சிலை கரைப்பைக் காண நேற்று இரவு லட்சக்கணக்கான மக்கள் கடற்கரைகளில் கூடியிருந்தனர். 103 ஆண்டுக்கால சிறப்பு வாய்ந்த சிஞ்ச்பொக்லி சா சிந்தாமணி விநாயகர் நேற்று காலை புறப்பட்டு இன்று காலை 7 மணிக்குத்தான் கடற்கரையை வந்தடைந்தது. இதே போல் மலபார் ஹில் சா ராஜா, சிஞ்ச்பொக்லி கணேஷ் கல்லி மும்பை சா ராஜா விநாயகர் சிலைகள் பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. மகாராஷ்டிராவின் மிகப்பெரிய விநாயகர் சிலையாகக் கருதப்பட்ட 38 அடி உயரமுள்ள விநாயகர் நேற்று இரவு 7.30 மணிக்கு கிர்காவ் கடற்கரைக்கு வந்து சேர்ந்தது.

மும்பையில் அதிக பக்தர்களைக் கவர்ந்த லால்பாக் ராஜா விநாயகர் நேற்று அதிகாலை பந்தலிலிருந்து புறப்பட்டது. வழி நெடுக மக்கள் கட்டடங்களின் மேலே இருந்து லால் பாக் ராஜாவிற்கு பூ மழை பெய்யச் செய்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் நடுவே மிதந்து வந்த லால்பாக் ராஜா இன்று காலையில்தான் கிர்காவ் சவுபாத்தி கடற்கரைக்கு வந்து சேர்ந்தது. சிலை கரைப்பின் போது கடற்கரையில் பக்தர்களின் ‘கணபதி பாபா மோரியா’ என்ற கோஷம் விண்ணை முட்டும் வகையிலிருந்தது. விநாயகர் ஊர்வலத்தையொட்டி மும்பையில் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து மூடப்பட்டு இருந்தது. விநாயகர் சிலைகள் மட்டுமே இச்சாலையில் அனுமதிக்கப்பட்டன. இதனால் சாலைகள் வாகனங்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.

லால் பாக் ராஜா கணபதி

விநாயகர் சிலை தயாரிப்பு மற்றும் விநாயகர் சதுர்த்திக்குப் புகழ்பெற்ற மும்பை சிஞ்ச்பொக்லி நேற்று காலையிலேயே விழாக்கோலம் பூண்டு இருந்தது. இங்குதான் அதிகப்படியான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தன. மும்பையின் பன்வெல் அருகே கோலிவாடா பகுதியில் விநாயகர் சிலை கரைப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிலை கரைப்புக்காக மின்வசதியும் செய்யப்பட்டிருந்தது. இதில் திடீரென மின் வயர் அறுந்து பக்தர்கள் மீது விழுந்தது. உடனே பக்தர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். மின்சாரம் தாக்கி 9 வயது குழந்தை உட்பட 11 பேர் காயம் அடைந்தனர். முதலில் ஒருவர் மீதுதான் மின் வயர் விழுந்தது. அவரை மற்றவர்கள் காப்பாற்ற முயன்றபோது அவர்களும் காயம் அடைந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.