விழுப்புரம்: மறைந்தும் 8 பேருக்கு வாழ்வளித்த இளைஞர்; அவர் மனைவியின் வாழ்வாதாரத்திற்கு உதவுமா அரசு?

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே உள்ள கக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சந்தோஷ். கூலி தொழிலாளியான இவருக்குத் திருமணமாகி ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 7-ம் தேதி மாலை 4 மணியளவில் விழுப்புரத்திலிருந்து இருசக்கர வாகனம் மூலம் கக்கனூருக்கு சந்தோஷ் திரும்பி வந்துகொண்டிருந்தார். அப்போது இவரது வாகனத்துடன் லாரி மோதிய விபத்தில், சந்தோஷ் படுகாயமடைந்துள்ளார். சுயநினைவு இல்லாத நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்தோஷுக்குச் சிகிச்சை பலனளிக்காமல் போயுள்ளது. சந்தோஷை பரிசோதித்த மருத்துவக் குழுவினர், அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதை உறுதி செய்துள்ளனர்.

சான்றிதழ் வழங்கிய மாவட்ட ஆட்சியர் மோகன்

இதனைத் தொடர்ந்து, சந்தோஷின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது மனைவி மற்றும் பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதன்படி நேற்று காலை 5.30 மணி அளவில் உடல் உறுப்புகளை மீட்டெடுக்கும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவினர், சந்தோஷின் இதயம், கல்லீரல், இரண்டு சிறுநீரகம், இரண்டு நுரையீரல், இரு கருவிழிகளை மீட்டு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் சென்னை, திருச்சி போன்ற இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவரது உடல் உறுப்பு தானத்தின் மூலமாக 8 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல் உறுப்புகளை மீட்டெடுக்கும் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

இந்நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் மோகன் மற்றும் எஸ்.பி ஸ்ரீநாதா ஆகியோர், சந்தோஷின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு அவரது குடும்பத்தாரிடம் உடல் உறுப்பு தானத்திற்கான சான்றிதழ் வழங்கி ஆறுதல் கூறினர்.

சந்தோஷின் துணைவியார்

“எனது கணவர் வாகன விபத்தால், மூளைச்சாவு அடைந்து உயிரிழந்துவிட்டார். எனக்கும் என்னுடைய குழந்தை மற்றும் குடும்பத்திற்கும் இந்த அரசு உதவி செய்ய வேண்டும். எங்களுடைய வாழ்வாதாரத்திற்காக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வார்த்தைகள் கனத்தபடி கோரிக்கை வைக்கிறார் சந்தோஷின் மனைவி புவனேஸ்வரி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.