வேலூர்: வேலூர் மத்திய சிறையில் முருகன் தொடர்ந்து 3வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் கடந்த 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இதே வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். முருகனின் மனைவி நளினிக்கு பரோல் வழங்கப்பட்டு அவர் உறவினர் வீட்டில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தங்கியுள்ளார்.
இதற்கிடையே, வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் தனக்கும் பரோல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பலமுறை சிறை நிர்வாகத்திடம் மனு அளித்தார். ஆனால் அவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதால் பரோல் வழங்க முடியாது என்று சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது. இதனால் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரிக்க கோரி முருகன் ஏற்கனவே வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் நேற்று முன்தினம் முதல் திடீரென உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். சிறை நிர்வாகம் வழங்கிய உணவை ஏற்க மறுத்து தொடர்ந்து, 3வது நாளாக இன்றும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். உண்ணாவிரத்தை கைவிடக்கோரி சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.