வேல்ஸ் இளவரசராக வில்லியம் மற்றும் அவரது மனைவி கேத்தரீன் இளவரசியாகவும் அழைக்கப்படுவார்கள் என அரசர் சார்லஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவால் அவரது மூத்த மகனான இளவரசர் சார்லஸ், புதிய அரசராகி உள்ளார். இதனை தொடர்ந்து, அரசர் சார்லஸ் தனது மூத்த மகன் வில்லியமை வேல்ஸ் இளவரசராக்கி உள்ளார். இதன்படி, வில்லியமின் மனைவி இளவரசி ஆகியுள்ளார்.
இதுபற்றி அரசர் சார்லஸ் தனது உரையில் பேசும் போது, வேல்சின் இளவரசராக வில்லியம் மற்றும் இளவரசியாக கேத்தரீன் (கேத் மிடில்டன்) இருப்பார்கள். அவர்கள் தொடர்ந்து ஊக்கம் ஏற்படுத்தி, விளிம்பு நிலையில் உள்ளவர்களை மைய நிலைக்கு உயர்த்தி, முக்கியத்துவம் வாய்ந்த உதவிகளை வழங்குவதற்கான நமது தேசிய பேச்சுவார்த்தைகளை வழிநடத்தி செல்வார்கள் என கூறியுள்ளார்.
அரசர் சார்லசின் உரையை தொடர்ந்து, ஒரு சில நிமிடங்களில் வில்லியம் மற்றும் கேத் மிடில்டனின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக முகப்பு பக்கங்களும் இளவரசர் மற்றும் இளவரசி என பிரதிபலிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டன. இனி, ஊடகங்களில் அவர்கள் இளவரசர் மற்றும் இளவரசி என அழைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
ராணி எலிசபெத் இறுதி சடங்கில் கலந்து கொள்ளும் ஜோ பைடன்!
இதேபோன்று, வில்லியம் தம்பதியின் குழந்தைகளும் இனி இளவரசர் பட்டத்துடனேயே அழைக்கப்படுவார்கள். இதன்படி அவர்கள் இளவரசர் ஜார்ஜ், இளவரசி சார்லட் மற்றும் இளவரசர் லூயிஸ் என அழைக்கப்படுவார்கள்.
இதேபோன்று, தனது இளைய மகனான ஹாரி, அவரது மனைவி மேகன் ஆகிய இருவரை குறிப்பிட்டு பேசும்போது, அவர்கள் இருவரும் வெளிநாடுகளில் அவர்களது வாழ்க்கையை தொடர்ந்து கட்டமைத்திடுவார்கள் என்றும் அவர்களுக்கு தனது அன்பை வெளிப்படுத்த விரும்புகிறேன் என்றும் அரசர் சார்லஸ் கூறியுள்ளார். அரச குடும்பத்தில் இருந்து விலகிய ஹாரி தம்பதி அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்கு சென்று தங்களது வாழ்க்கையை தொடர்ந்து வருகின்றனர்.