நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா திருக்கொடி இறக்கப்பட்டு, நேற்றுடன் நிறைவு பெற்றது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதாபேராலய ஆண்டுப் பெருவிழாஆக.29-ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு, நாள்தோறும் பேராலயம், பேராலய கீழ் மற்றும் மேல் கோயில், விண்மீன் ஆலயம் ஆகியவற்றில் தமிழ், ஆங்கிலம், மராத்தி, கொங்கணி, தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திருப்பலி நடைபெற்றது. மேலும், புனிதப்பாதையில் சிலுவைப் பாதை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து,தினமும் இரவு 8 மணி அளவில் சிறிய தேர் பவனி நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில், புனித ஆரோக்கிய மாதா பெரிய தேரிலும், அதற்கு முன்னால் 6 சிறிய சப்பரங்களில் மிக்கேல், சம்மனசு, செபஸ்தியார், அந்தோணியார், சூசையப்பர், உத்திரிய மாதா ஆகியோரும் எழுந்தருள தேர்பவனி நடைபெற்றது. ஆரோக்கிய மாதாவை தரிசனம் செய்த பக்தர்கள் ஒருசேர, மரியே வாழ்க, மாதாவே வாழ்க, பசிலிக்கா பசிலிக்கா என பக்தி பரவசத்துடன் முழக்கங்களை எழுப்பினர்.
மாதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, விண்மீன் ஆலயத்தில் நேற்று தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் தலைமையில் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து, மாலை 6 மணி அளவில் திருக்கொடியிறக்கப்பட்டு, விழா நிறைவுபெற்றது.
பின்னர், மாலை 6.15 மணி அளவில், பேராலய கீழ்கோயிலில் மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணைஆசி, தமிழில் திருப்பலி ஆகியவை நடைபெற்றன.