அதிகளவு படங்களில் நடிப்பதைவிட, தரமான படங்களில் நடிப்பதே தனது விருப்பம் என்று நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
நடிகர் ஜெயம் ரவி தனது 42-வது பிறந்தநாளையொட்டி இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். தனது 20 வருட திரைப்பயணம் மற்றும் அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வுக்கு தனது மனைவி ஆர்த்தியுடன் வந்து ‘பிரேமவாசம் இல்லம்’ குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார் நடிகர் ஜெயம்ரவி.
நிகழ்வில் பேசிய ஜெயம்ரவி “எந்த பிறந்தநாளையும் இப்படி கொண்டாடியதில்லை. குடும்பத்துடன் ஹாலிடே சென்று விடுவேன். ஆனால் உருப்படியாக எதாவது செய்ய வேண்டும் என வீட்டில் சொன்னார்கள். உங்களை சந்திப்பதை விட நல்ல விஷயம் வேறு இல்லை. நீங்கள் என் வாழ்வின் அங்கமாக இருந்திருக்கிறீர்கள். உங்கள் வாழ்த்துகளும், ஆசிர்வாதமும் வாங்க விரும்பினேன். அப்பா, அம்மாவும் இங்கு வர விரும்பினார்கள். அப்பாவுக்கு உடல்நிலை சரி இல்லாததால் அவரால் இங்கே வர முடியவில்லை.
என்னுடைய சினிமா பயணமான 20 வருடத்தில் 25 படங்கள் தான் நடித்திருக்கிறேன். மற்ற நடிகர்களுடன் ஒப்பிட்டால் மிகவும் கம்மிதான். இது ஏன் என யோசிக்கும் போது, ஒரு உண்மைதான் புரிந்தது. நான் எப்போதுமே படங்களின் குவான்டிட்டியை விட குவாலிட்டிக்கு மதிப்பு கொடுக்கும் நபராக இருந்திருக்கிறேன். இது அப்பா சொல்லிக் கொடுத்தது. ‘ஜெயம்’ மிகப்பெரிய ஹிட் ஆகி 150 நாட்களுக்கு மேல் ஒடியது. ஆனால் அதன்பின் 8 மாதம் வீட்டில் சும்மா இருந்தேன். அடுத்த படம் நடி என்று சொல்லாமல், நல்ல படம் வரும் வரை காத்திரு என்று சொன்னார். அதனால் தான் என்னுடைய ஃப்ளாப் ரேஷியோ கம்மி என்று நினைக்கிறேன். அதுதான் என் வெற்றிக்கு காரணம் என்றும் நம்புகிறேன்.
இந்தப் பயணத்தில் சினிமாவிலும் வாழ்க்கையிலும் நிறைய கற்றுக் கொண்டேன். பத்திரிகையாளர்கள் உங்கள் பாராட்டு தான் என்னை வளர்த்தது, உங்கள் விமர்சனம் தான் எனக்கு கர்வம் வராமல் பார்த்துக் கொண்டது. இந்த ஆதரவுக்கு நன்றி. மேலும் இந்த தருணத்தில் பலருக்கு நன்றி சொல்ல வேண்டும். அம்மா அப்பா துவங்கி பலருக்கு நன்றி சொல்ல வேண்டும். அண்ணன் தான் என்னுடைய குரு. சைக்கிள், பைக் ஓட்டக் கற்றுக் கொடுத்தில் ஆரம்பித்து, புத்தக வாசிப்பு, சினிமா என பலதும் அவர் சொல்லிக் கொடுத்தார். அண்ணனும் எனக்கு அப்பா போன்றவர்தான்.
அக்கா உங்களைப் போன்றவர்தான், என் முகத்துக்கு நேராக விமர்சனம் சொல்வார். என் குழந்தைகள் என்னை ரியல் ஹீரோவாகவே ரசிப்பவர்கள். திரையில் என்னைப் பார்க்கும் போது உற்சாகம் ஆவார்கள். இது போக நான்கு பள்ளி நண்பர்கள் இருக்கிறார்கள். நான் சினிமா நடிகன் என்ற எந்த கூச்சமும் இல்லாமல் பழகக் கூடியவர்கள். பின்பு என்னுடைய ரசிகர்கள் எப்போதும் உற்சாகப்படுத்துவார்கள். லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், என் மனைவி ஆர்த்தி. எனக்காக எல்லாம் செய்யும் ஒருவர். அவர் இல்லாமல் நான் இப்படி இருந்திருக்க மாட்டேன். எனக்கு எல்லாமே அவர் தான். இப்படி எனக்கு துணைநிற்கும் அனைவருக்கும் நன்றி.
இன்னும் பல நல்ல படங்கள் நடித்து, அனுபவங்களோடு உங்களை சந்திக்க வேண்டும் என விரும்புகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நிகழ்வில் பேசிய ஆர்த்தி, “அவரின் எல்லா பிறந்தநாளுக்கும் அவரை எங்காவது அழைத்து சென்று விடுவோம். ஆனால் இந்த வருடம் அவர் உங்களை சந்திக்க வேண்டும் என விரும்பினோம். ‘பொன்னியின் செல்வன்’ வர இருக்கும் இந்த சமயம் அவரின் வாழ்வில் முக்கியமான நேரம். அப்படி ஒரு தருணத்தில் வரும் பிறந்தநாளை பத்திரிகையாளர்களுடன் கொண்டாடியதில் மகிழ்ச்சி” என்றார்.