ஆமதாபாத்: குஜராத்தை சேர்ந்த 52 வயதான தொழிலதிபர் ஒருவர், நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தின் போடக் தேவ் நகரில் வசிப்பவர் பிரதீப் குமார். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வை எழுதியிருந்தார். கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட முடிவுகளில் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு, பிரதீப்குமார் 607 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.அவர் கடந்த 1987 ல் பிளஸ் 2 தேர்வு எழுதிய நிலையில் அப்போது 71 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.பின்னர் டில்லி பல்கலையில், பிஏ (பொருளாதாரம்) மற்றும் அங்கேயே எம்பிஏ பட்டம் பெற்றிருந்தார். ஆரம்ப கட்டத்தில் வணிக பத்திரிகையாளராக இருந்த இவர், பின்னர் தொழில் துவங்கி தொழிலதிபர் ஆனார். அவரது மகன் பிஜின் ஸ்னேகன்ஸ், 3ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். இவர், கடந்த 2019ம் ஆண்டு நடந் நீட் தேர்வில் 595 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றது குறித்து பிரதீப் குமார் கூறியதாவது: எனது மகன் நீட் தேர்வுக்கு தயாராவதை பார்த்து தான் 52 வயதில் எனக்கும் ஆர்வம் வந்தது. நீட் தேர்வு பயிற்சி பெற, பயிற்சி மையங்கள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. இதனால், ஏழை மாணவர்களால் அங்கு படிக்க முடிவது கிடையாது. அவர்களின் மருத்துவ படிப்பு கனவாகவே போய் விடுகிறது.
எந்த மருத்துவ கல்லூரியிலும் சேரும் நோக்கம் எதுவும் எனக்கு இல்லை. ஏழை மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிப்பதே எனது நோக்கம். அதற்காக மருத்துவம் படிக்க விரும்பும் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நானும் நீட் தேர்வு எழுதினேன். இதில் தேர்ச்சி பெற்றதால், இனி ஏழை மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்க விரும்புகிறேன். எனது அனைத்து முயற்சிகளுக்கும் மகன் முழு ஆதரவு அளித்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement