சமீபத்தில் தான் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் மாடல் மொபைல்கள் வெளியிடப்பட்டன. அதோடு சேர்த்து
ஆப்பிள் வாட்ச் SE 2வது ஜென் , ஆப்பிள் வாட்ச் 8
மற்றும்
ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா
ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன.
முன்னெப்போதையும் விட இந்த முறை அதிகமாக உடல்நலம் சார்ந்த மற்றும் விபத்து பாதுகாப்பு அம்சங்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளன. குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியை கண்காணிக்கும் அம்சங்கள் , விபத்து ஏற்படும்போது உடனே தன்னிச்சையாக அவசர சேவைக்கு அழைப்பது உட்பட பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
அதே போல் இதய துடிப்பு கண்காணிப்பு, இசிஜி , நடைபயண கண்காணிப்பு உட்பட பல்வேறு அம்சங்கள் ஆப்பிள் வாட்ச் நான்கிலிருந்தே இருக்கிறது. ஏற்கனவே, பலரும் இந்த சேவைகளால் பலனடைந்துள்ளதை பல்வேறு பத்திரிகைகளில் வந்த செய்திகளில் கேள்விப்பட்டிருப்போம்.
அப்படி சமீபத்தில் யுனைடெட் கிங்டமை சேர்ந்த டேவிட் லாஸ்ட் என்ற 54 வயது முதியவர் ஒருவர் ஆப்பிள் வாட்சால் காப்பற்றப்பட்டுள்ள செய்தி பலரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது. டேவிடுக்கு அவரது மனைவி ஆப்பிள் ஸ்மார்ட் வாட்சை அவரது பிறந்த நாளுக்காக பரிசாக கொடுத்துள்ளார்.
இந்நிலையில் நாட்கள் செல்ல செல்ல வாட்ச்சில் காட்டும் இதய துடிப்பு கண்காணிப்பு கருவியின் ரிப்போர்ட் கொஞ்சம் வித்யாசமாக இருந்துள்ளது.
சாதாரண ஆரோக்கியமான மனிதர்களுக்கு ஒரு நிமிடத்திற்கு இதயம் 60லிருந்து 100 முறை துடிக்கும். ஆனால், ஆப்பிள் வாட்ச் கொடுத்த முடிவுகளின் படி டேவிடுக்கு நிமிடத்திற்கு 30 என்ற அடிமட்ட நிலையில் இதய துடிப்பு இருந்துள்ளது.இதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை என்றாலும் அவரது மனைவி அவரை மருத்துவ மனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளார்.
அப்போதுதான் அவரது இதயம் 48 மணிநேரத்தில் 138 முறை நின்று நின்று துடித்துள்ளது என்ற உண்மை அவர்களுக்கு தெரிய வந்துள்ளது. அது அவரை மரணம் ஏற்படுத்தும் இதய வலி வருவதற்கான அறிகுறி என்றும் அவரது இதயத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.பின்னர் தேவையான மருத்துவ சிகிச்சைக்கு பிறகு டேவிட் காப்பற்றப்பட்டுள்ளார்.
ஆப்பிள் வாட்ச் சரியாக கணித்து கூறியதால்தான் டேவிட் காப்பற்றப்பட்டார் என்ற செய்தி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பிறகென்ன, உங்களின் அன்புக்குரிய ஒருவருக்கு ஆப்பிள் வாட்சை உடனே பார்சல் செய்ய வேண்டியதுதான்..