1926-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி இங்கிலாந்து அரச குடும்பத்தில் பிறந்தவர் எலிசபெத். 1952-ல் அரியணை ஏறியபோது அவருக்கு 25 வயது. 70 ஆண்டு காலமாக முடியாட்சி நடத்திய ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96வது வயதில் காலமானார். இவர் அதிக ஆண்டுகள் ஆண்ட ராணி என்ற பெருமையைப் பெற்றவர்.
அவர் காலமானதைத் தொடர்ந்து, அவரைப் பற்றிய செய்திகளும், தகவல்களும், புகைப்படங்களும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இங்கிலாந்து ராணி எலிசபெத்திற்கு மிகவும் பிடித்த வீடு என்றால் அது ஸ்காட்லாண்டில் உள்ள பால்மோரல் இல்லம்தானாம் (Balmoral Castle).
இந்த பால்மோரல் இல்லம் ஸ்காட்லாந்திலுள்ள ‘Aberdeenshire’ என்னும் இடத்தில் 50,000 ஏக்கர்கள் கொண்ட எஸ்டேட்டாக இருக்கிறது. ராணி எலிசபெத், தன்னுடைய சிறு வயதில் தாத்தா கிங் ஜார்ஜ், பாட்டி ராணி மேரியுடன் கிராமப்புறங்களால் சூழப்பட்ட இந்த பால்மோரல் இல்லத்தில்தான் தன் மகிழ்ச்சியான விடுமுறை நாள்களைப் பெரும்பாலும் கழித்திருக்கிறார். அரசு சார்பில் இங்கு ஏராளமான விருந்து விழாக்களையும் நடத்தியுள்ளார். இதுமட்டுமின்றி அங்கு நடைபெறும் பல விளையாட்டு நிகழ்வுகளையும் மற்ற அரச குடும்ப உறுப்பினர்களுடன் பார்த்து மகிழ்ந்திருக்கிறார்.
இளவரசர் பிலிப்பின் கடைசி நாள்களின் பெரும்பகுதியை ராணி எலிசபெத், அவருடன் பால்மோரல் இல்லத்தில்தான் கழித்திருக்கிறார். நவம்பர் 2020-ல் தங்கள் 73வது திருமண ஆண்டு விழாவை பால்மோரல் இல்லத்தில்தான் கொண்டாடியிருக்கின்றனர். இங்குதான் ராணியின் உயிரும் பிரிந்திருக்கிறது. இந்த பால்மோரா இல்லம் என்பது 1852-ம் ஆண்டு ஃபார்குஹார்சன் (Farquharson) என்ற ராயல் குடும்பத்திடம் இருந்து வாங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.