வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் கிடைக்கும் ஆர்.,டி., வைப்புத் தொகையானது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிலையான மாதாந்திர வட்டியை முதலீட்டாளர்களுக்கு வழங்குகிறது.
அந்த வகையில், ரூ.5 லட்சம் வரையிலான வங்கி வைப்புத்தொகைகள் வைப்புத்தொகை காப்புறுதி உத்தரவாதத்துடன் கிடைக்கின்றன. இதனால் குறிப்பிட்ட நிதி இலக்குகளுக்கு பாதுகாப்பான வழிகளில் ஒன்றாக RD கணக்கு செயல்படுகிறது.
பாரத ஸ்டேட் வங்கியில் (SBI), குறைந்தபட்சம் 12 மாதங்கள் மற்றும் அதிகபட்சம் 120 மாதங்கள் வரை நீங்கள் RD கணக்கைத் தொடங்கலாம். SBI RD இல் நீங்கள் டெபாசிட் செய்யக்கூடிய குறைந்தபட்சத் தொகை மாதம் ரூ. 100 ஆகும். அதன் பிறகு ரூ. 10 இன் மடங்குகளில் சேமிக்கலாம்.
அஞ்சல் அலுவலகங்கள் 5 வருட தொடர் வைப்பு கணக்கை வழங்குகின்றன. தபால் அலுவலக RD இன் தற்போதைய வட்டி விகிதம் 5.8% ஆகும்.
இந்த அஞ்சலக திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் ரூ.100 மற்றும் அதன் பிறகு ரூ.10 இன் மடங்குகளில் டெபாசிட் செய்யலாம். டெபாசிட் செய்பவர்கள், சம்பந்தப்பட்ட தபால் அலுவலகத்தில் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதன் மூலம், கணக்குத் தொடங்கிய நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு, அஞ்சலக RD ஐ முன்கூட்டியே மூடலாம்.
60 மாத டெபாசிட்டுகளுக்குப் பிறகு (அல்லது 5 ஆண்டுகள்) தபால் அலுவலக RD முதிர்ச்சியடைகிறது. விண்ணப்பத்தை வழங்குவதன் மூலம் சந்தாதாரர் அஞ்சல் அலுவலக RDஐ மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டுமென்றால் நீட்டிக்கலாம்.
எவ்வாறாயினும், நீட்டிக்கப்பட்ட RD கணக்கில் பொருந்தக்கூடிய வட்டி விகிதம், கணக்கு முதலில் தொடங்கப்பட்ட விகிதமாக இருக்கும்.
5 வருட டெபாசிட்டுக்கான SBI RD கணக்கீடு
ஐந்தாண்டு டெபாசிட்டுகளுக்கு, 13-08-2022 முதல் அமலுக்கு வரும் திருத்தப்பட்ட விகிதங்களின்படி, எஸ்பிஐ தற்போது ரூ.2 கோடி வரையிலான வைப்புகளுக்கு 5.6% வட்டியை வழங்குகிறது.
நீங்கள் SBIயில் மாதம் 10,000 ரூபாய் RD ஐத் தொடங்கினால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வுத் தொகை 6,93,323 ரூபாயாக இருக்கும்.
வங்கி மூத்த குடிமக்களுக்கு 5 ஆண்டு கால வைப்புகளுக்கு 6.45% வட்டி வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கான SBI RD ரூ. 10,000ம், 5 ஆண்டுகளுக்குப் பிறகு சுமார் ரூ.7,08,040 திரும்பக் கிடைக்கும்.
தபால் அலுவலக RD கணக்கீடு
அஞ்சலக RD-யில் மாதாந்திர வைப்புத் தொகையான ரூ.100 வீதம் சேமித்தால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.6969.67 திரும்பக் கிடைக்கும்.
நீட்டிப்புக்குப் பிறகு, இந்தத் தொகை 6 ஆண்டுகளில் ரூ.8620.98 ஆகவும், 7 ஆண்டுகளில் ரூ.10,370 ஆகவும், 10 ஆண்டுகளில் ரூ.16264.76 ஆகவும் பெருகும்.
அஞ்சல் அலுவலக தொடர் வைப்புத்தொகையில் மாதாந்திர வைப்புத் தொகையான ரூ.10,000, 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியின் போது ரூ.6.9 லட்சத்துக்கும் அதிகமாகத் திரும்பக் கிடைக்கும்.
RD ஐ விட சிறந்த வருமானம் வேண்டுமா?
சிறந்த வருமானத்தை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்கள் மாதாந்திர சிறு முதலீடு (SIP) மூலம் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்யலாம். இருப்பினும், முதலீட்டாளர்கள் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வதற்கு முன் தொழில்முறை மற்றும் சான்றளிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. ஏனெனில், அவை சந்தை அபாயங்களுக்கு உள்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“