நியூயார்க்: கழிவு நீரில் போலியோ வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மருத்துவ அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் லாங் ஐலாண்ட் எனுமிடத்திற்கு உட்பட்ட நசாவு கவுன்ட்டியில் கழிவுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அப்போது, அதில் போலியோ வைரஸ் கிருமிகள் கண்டறியப்பட்டன. இந்நிலையில் அம்மாகாண ஆளுநர் கேத்தி ஹோச்சுல் அவசரநிலையை பிரகடனம் செய்தார்.
இந்நிலையில் அங்கு மருத்துவர்கள், செவிலியர்களுக்கு போலியோ தடுப்பு மருந்து வழங்க அனுமதியளிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதார ஆணையர் மேரி பேஸட் கூறுகையில், “போலியோவைப் பொறுத்தவரை நாம் எவ்வித சுணக்கமும் காட்ட முடியாது. அது ஆபத்தில் முடியும். ஆகையால் நீங்களோ உங்கள் குழந்தைகளோ போலியோ தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் உடனே எடுத்துக் கொள்ளுங்கள். கால்களை முடக்கக் கூடிய இந்த வைரஸின் தாக்கம் கொடூரமானது. நியூயார்க் நகர மக்கள் எவ்வித ஆபத்தை எதிர்கொள்ளாதிருக்க தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ளுங்கள். போலியோ தடுப்பூசி முழுமையாக எடுத்துக் கொண்டவர்கள் கூட பூஸ்டர் டோஸ்களை எடுத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்” என்றார்.
அதேபோல், ராக்லாண்ட் கவுன்டி, ஆரஞ்சு கவுன்டி, சல்லிவன் கவுன்டி, நசாவு கவுன்டி, நியார்க் நகரில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் அனைவருமே போலியோ பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதேபோல் தொழில்ரீதியாக கழிவுநீரை கையாள வேண்டியவர்களும் கூட போலியோ பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜூலையில் பதிவான போலியோ நோய்: அமெரிக்காவில் கடந்த 2013க்குப் பின்னர் மான்ஹாட்டான் நகரில் ராக்லாண்ட் கவுன்டியில் முதல் போலியோ தொற்றாளார் கண்டறியப்பட்டார் என்று அந்நாட்டு நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.