ஆசிய கிரிக்கெட் கோப்பையை வெல்லப்போவது யார்? பாகிஸ்தான்-இலங்கை இன்று பலப்பரீட்சை

ஆசிய கோப்பை கிரிக்கெட்

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) கடந்த மாதம் 27-ந் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. 6 அணிகள் இடையிலான இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான் (ஏ பிரிவு), ஆப்கானிஸ்தான், இலங்கை (பி பிரிவு) அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றன. வெற்றியே பெறாத ஹாங்காங், வங்காளதேசம் அணிகள் வெளியேற்றப்பட்டன.

சூப்பர்4 சுற்றில் இலங்கை அணி 3 ஆட்டங்களிலும் வெற்றியை ருசித்து 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தும், பாகிஸ்தான் அணி (2 வெற்றி, ஒரு தோல்வி) 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பெற்றும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. நடப்பு சாம்பியன் இந்தியா (ஒரு வெற்றி, 2 தோல்வி) 2 புள்ளியுடன் 3-வது இடமும், 3 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்த ஆப்கானிஸ்தான் அணி கடைசி இடத்துக்கும் தள்ளப்பட்டு இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தன.

பாகிஸ்தான்-இலங்கை மோதல்

இந்த நிலையில் ஆசிய கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி துபாயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடக்கிறது. இதில் முன்னாள் சாம்பியன்களான இலங்கை-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் பேட்டிங்கில் முகமது ரிஸ்வான் சிறப்பான நிலையில் உள்ளார். அவருக்கு பக்கபலமாக பஹர் ஜமான், இப்திகர் அகமது ஆகியோர் இருக்கின்றனர். கேப்டன் பாபர் அசாமின் பேட்டில் இருந்து போதுமான ரன் வரவில்லை. அவர் இதுவரை 5 ஆட்டங்களில் ஆடி 63 ரன்களே எடுத்து இருக்கிறார். எதிரணிக்கு வலுவான சவால் அளிக்க வேண்டுமானால் அவர் பேட்டிங்கில் நிலைத்து நின்று விளாச வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் ஷதப் கான், நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப் வலுசேர்க்கிறார்கள். முகமது நவாஸ் ஆல்-ரவுண்டராக அசத்துகிறார்.

எழுச்சி கண்ட இலங்கை

தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி தனது முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் மோசமான தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு அந்த அணி எல்லா ஆட்டங்களிலும் வெற்றி கண்டு கம்பீரமாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருக்கிறது. தற்போது இலங்கை அணி ஆக்ரோஷமாகவும், அதிரடியாகவும் விளையாடுகிறது. இதுவரை அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் மொத்தம் 28 சிக்சர்களும், 62 பவுண்டரிகளும் விளாசி இருப்பதே அதற்கு சாட்சியாகும். பேட்டிங்கில் பதும் நிசாங்கா, குசல் மென்டிஸ், பானுகா ராஜபக்சே, தசும் ஷனகாவும், பந்து வீச்சில் ஹசரங்கா, தில்ஷன் மதுஷனகா, தீக்‌ஷனா, சமிகா கருணாரத்னேவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் (சூப்பர்4 சுற்று) இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தியது. இதனால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து கோப்பையை கைப்பற்ற பாகிஸ்தான் அணி வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 22 முறை சர்வதேச 20 ஓவர் போட்டியில் மோதி இருக்கின்றன. இதில் பாகிஸ்தான் 13 ஆட்டங்களிலும், இலங்கை 9 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. துபாய் ஆடுகளம் 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கு அனுகூலமாக இருப்பதால் இந்த ஆட்டத்தில் டாஸ்சும் முக்கிய பங்கு வகிக்கும்.

இரவு 7.30 மணிக்கு…

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (கேப்டன்), பஹர் ஜமான், இப்திகர் அகமது, ஷதப் கான், முகமது நவாஸ், ஆசிப் அலி, குஷ்தில் ஷா, ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா, முகமது ஹஸ்னைன்.

இலங்கை: பதும் நிசாங்கா, குசல் மென்டிஸ், தனஞ்ஜெயா டிசில்வா, தனுஷ்கா குணதிலகா, தசுன் ஷனகா (கேப்டன்), பானுகா ராஜபக்சே, சமிகா கருணாரத்னே, ஹசரங்கா, தீக்‌ஷனா, பிரமோத் மதுஷன், தில்ஷன் மதுஷனகா.

இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.