லண்டன்: இங்கிலாந்தின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் நேற்று பொறுப்பேற்றார். ராணி இரண்டாம் எலிசபெத் போல், நாட்டுக்காக அரசியல் சாசன விதிமுறைகளைப் பின்பற்றி அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய முதல் டி.வி. உரையில் மன்னர் மூன்றாம் சார்லஸ் கூறினார்.
இங்கிலாந்து ராணியின் மறைவுக்குப்பின் இளவரசர் சார்லஸ் உடனடியாக மன்னர் மூன்றாம் சார்லஸாக ஆனார். இதற்கான முறையான அறிவிப்பை, பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அருகில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையின் அதிகாரப்பூர்வ ஏற்பு குழு நேற்றுஅறிவித்தது. இங்கிலாந்தில் அரியணையில் இருப்பவர்கள் இறந்தபின், அவர்களை பின்தொடரும் வாரிசு குறித்த அறிவிப்பை செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் உள்ள ஏற்பு குழு அதிகாரப்பூர்வமாக வெளியிடும். அதன்படி ராணி எலிசபெத் இறந்து இரண்டு நாட்களுக்குப்பின், புதிய மன்னராக சார்லஸை நேற்று காலை 11 மணிக்கு செயின்ட் ஜேம்ஸ் அரண்மனை ஏற்பு குழு பால்கனியிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதே போன்ற அறிவிப்பு ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் வேல்ஸ் பகுதியிலும் அறிவிக்கப்பட்டது. அதன்பின் நாட்டு மக்களுக்கு டி.வி.யில் மன்னராக முதன் முதலில் ஆற்றிய உரையில், மன்னர் மூன்றாம் சார்லஸ் பேசியதாவது: இன்று நான் மிகுந்த வருத்தத்துடன் உங்களுடன் பேசுகிறேன். வாழ்நாள் முழுவதும் ராணியும், எனது அன்பிற்குரிய
தாயும் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் ஊக்குவிப்பாக இருந்தார். நாங்கள் அவருக்கு மிகவும் கடமைபட்டிருக்கிறோம். கடந்த 1947-ம் ஆண்டு ராணி, தனது 21-வது பிறந்த நாளில் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, தனது வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணிப்பதாக கூறினார். அதேபோல், அவர் தனது வாழ்நாள் முழுவதும், உறுதியான அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்.
அதுபோல், நானும், கடவுள் எனக்கு அருளும் வாழ்நாளில், நாட்டுக்காக, அரசியல் சாசன விதிமுறைகளை பின்பற்றி அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என உறுதியளிக்கிறேன். ராணி எலிசபெத் வாழ்நாள் முழுவதும் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் வாழ்ந்தார். அந்த உறுதிமொழியை, நானும் நாட்டு மக்களுக்கு இன்று அளிக்கிறேன். எனது கடமைகளையும், பொறுப்புகளையும் நான் நன்கு அறிவேன். நான் எனது வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு அன்புடனும், மரியாதையுடனும், விசுவாசத்துடனும் சேவையாற்ற முயற்சிப்பேன். எனது தாயின் நினைவுக்கும், அவரது சேவைக்கும் நான் புகழஞ்சலி செலுத்துகிறேன். அவரது மரணம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இழப்பை நீங்களும், நானும் பகிர்ந்து கொள்கிறோம். எனது சகோதரர், சகோதரிகளாகிய நீங்கள் என்னிடம் காட்டிய அளவுகடந்த இரக்கம், அன்பு ஆகியவை எனக்கு மிகுந்த ஆறுதலாக உள்ளது. எனது அன்பிற்குரிய தாய், எனது அன்பிற்குரிய மறைந்த தந்தையடன் சேருவதற்கு தனது இறுதி பயணத்தை தொடங்கிவிட்டார். அவருக்கு நன்றி. இவ்வாறு மன்னர் மூன்றாம் சார்லஸ் பேசினார்.
இவரது பதிவு செய்யப்பட்ட பேச்சு, நாட்டு மக்களுக்கு ஒலிபரப்பப்பட்டது. செயின்ட் பால் தேவாலயத்தில் ராணியின் நினைவாக நடத்தப்பட்ட பிரார்த்தனை கூட்டத்திலும், அவரது உரை வெளியிடப்பட்டது. அதன்பின், ‘மன்னரை கடவுள் காப்பாற்ற வேண்டும்’ என்ற தேசிய கீதம் தேவாலயத்தில் இசைக்கப்பட்டது.
அணிவகுப்பு மரியாதை: புதிய மன்னர் சார்லஸுக்கு பக்கிங்ஹாம் அரண்மனை காவலர்கள் சிறப்பு அணிவகுப்பு மரியாதை அளித்தனர். புதிய மன்னருக்கு மதிப்பளிக்கும் வகையில் பீரங்கி குண்டுகளும் முழங்கின.
முழு கம்பத்தில் பறந்த கொடி: புதிய மன்னர் அறிவிக்கப்பட்டதற்கு மதிப்பளிக்கும் வகையில் இங்கிலாந்தில் தேசிய கொடிகள் 24 மணி நேரத்துக்கும் முழு கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. அதன்பின் ராணி மறைவுக்கு 10 நாள் துக்கம் முடியும் வரை இங்கிலாந்து கொடி மீண்டும் அரை கம்பத்தில் பறக்கும்.
மக்கள் கூட்டம்: ராணி எலிசபெத்துக்கு இரங்கல் தெரிவிக்கவும், புதிய மன்னருக்கு வாழ்த்து கூறவும் இங்கிலாந்து மக்கள் ஏராளமானோர் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியே குவிந்தனர். அரண்மனை வாயிலில் பூங்கொத்துக்கள் குவிந்து கிடக்கின்றன. சிலர் ‘புதிய மன்னரை கடவுள் காப்பாற்ற வேண்டும்’ என கோஷம் எழுப்பினர். ஸ்காட்லாந்தில் இருந்து நேற்று முன்தினம் லண்டன் திரும்பிய மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு மக்கள் பூங்கொத்துக்கள் மற்றும் முத்தம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்பு: மறைந்த ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்கமாட்டார் என கிரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளது.