இரண்டு டீ குடித்த ராகுல் காந்தி – அதிகாலையில் சர்ப்ரைஸ் அடைந்த டீக்கடை சேட்டன்…

பாரத் ஜோடா யாத்ரா’ (இந்தியாவின் ஒற்றுமைக்கான நடைபயணம்) என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைபயணத்தை முன்னாள் காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். இதை முன்னிட்டு, கடந்த செப்.7ஆம் தேதி சென்னை வந்த ராகுல் காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

பின்னர், ஹெலிகாப்டர் மூலம் சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற ராகுல் அன்று மாலையே தனது நடைபயணத்தை தொடங்கினார். முதல்நாள் நடைபயணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார். தொடர்ந்து, நேற்றைய 4ஆவது நாள் பயண முடிவில் ராகுல் காந்தி, தமிழ்நாடு-கேரள எல்லையான தளச்சான் விளை சென்றடைந்தார். இதையடுத்து, இன்று கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் தனது 5ஆவது நாள் நடைபயணத்தை தொடர்கிறார்.

அந்த வகையில், இன்று அதிகாலை கன்னியாகுமரி – திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில் அவர் நடைபயணம் மேற்கொண்டபோது, இளைப்பாறுவதற்கு சாலையோரம் இருந்த டீக்கடைக்கு சென்றுள்ளார். இந்நிலையில், ராகுல் காந்தி தனது கடைக்கு வந்து டீ சாப்பிட்டுவிட்டு தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது குறித்த தனது அனுபவத்தை அந்த டீக்கடையின் உரிமையாளர் பகிர்ந்துள்ளார். 

“திடீரென எனது கடைக்கு ஒரு விஐபி வருகிறார் என தெரிந்ததும் மிகவும் ஆச்சர்யமடைந்தேன். ராகுல் காந்தியின் யாத்திரை இந்த வழியாக தான் செல்கிறது என கேள்விப்பட்டேன். நானும் அவரின் நடை பயணத்தை பார்க்கவே காத்திருந்தேன். ஆனால், அவர் என் கடைக்கு சாப்பிட வருவார் என நான் எதிர்பார்க்கவில்லை. 

ராகுல் காந்தி என் கடைக்கு வருவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னர், கட்சி பிரமுகர் ஒருவர் வந்து ராகுல் இங்கு வருகிறார் என்றும் டேபிளை சுத்தம் செய்து வைக்கும்படியும் கூறினார். அதைத் தொடர்ந்து, அவர் என் கடைக்கு வந்த உடன் இந்த சாலை பாதுகாப்பு அதிகாரிகளால் மூடப்பட்டது. 

ராகுல் இங்கு வந்து டீ, பிஸ்கட் மற்றும் பழங்களை சாப்பிட்டார். அவர் இரண்டு முறை என்னிடம் டீ வாங்கி குடித்தார். அப்போது, கடையில் நான் மட்டுமே இருந்தேன். சாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள அழைத்தார். உடனடியாக எனது மனைவியை அழைத்து, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்’ என்றார். மேலும், ராகுல் காந்தி தன்னை புகைப்படம் எடுக்க அழைத்தது மிகவும் மகிழ்ச்சியளித்ததாக கூறிய அவர், ஒரு பெரிய தலைவர் தனது கடைக்கு வருவது இதுவே முதல் முறை என்றும் கூறினார். 

தினமும் 25 கி.மீ தூரம் நடக்கும் ராகுல் காந்தி, தனது 5ஆவது நாள் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை மொத்தம் 3,500 கி.மீ.,  தூரத்தை 150 நாள்களில் கடக்க அவர் திட்டமிட்டுள்ளார். 12 மாநிலங்களில் இந்த நடைபயணத்தை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டை அடுத்து கேரளா வந்துள்ள அவர், இங்கு 18 நாள்கள் நடைபயணத்தை மேற்கொள்கிறார். அதன்பின், செப்.30ஆம் தேதி கர்நாடகாவை அடையும் அவர், 21 நாள்கள் அங்கு நடைபயணம் மேற்கொள்கிறார். அங்கிருந்து வட மாநிலங்கள் நோக்கி பயணம் செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.