பாகிஸ்தானில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக, அண்மையில் இம்ரான் கான் தலைமையிலான அரசுமீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிபெற்றதால், இம்ரான் கான் அரசு கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து, பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் நியமிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, இம்ரான் கான் தற்போதைய பிரதமரை எதிர்த்து பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக, கடந்த மாதம் 20-ம் தேதி இஸ்லாமாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒரு பெண் நீதிபதியையும், போலீஸ் துறையையும் மிரட்டியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவருக்கு எதிராக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக அவர் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது அங்கு போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது.
அங்கு போலீஸ் குவிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிருப்தி அடைந்த அவர், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “போலீஸார் அதிகமாக குவிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள் யாருக்கு பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. என்னை சிறையில் அடைத்தால் நான் இன்னும் ஆபத்தானவனாகி விடுவேன். பெண் நீதிபதி தொடர்பாக நீதிமன்றத்தில் எனது கருத்து பற்றி எடுத்துக்கூறுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஒவ்வொரு கருத்துக்கும் ஒரு சூழல் உள்ளது. நாடு நாளுக்கு நாள் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. சர்வதேச நிதியமான ஐ.எம்.எஃப்-பின் அறிக்கை இதைத்தான் சுட்டிக்காட்டுகிறது.
இது பற்றி நான் அதிகம் பேசப்போவது இல்லை. ஏனென்றால் எனது கருத்தை திரித்து விடுகிறார்கள். ஆனால் தற்போது இருக்கும் நிலையற்ற தன்மைக்கு ஒரே தீர்வு மீண்டும் தேர்தல் நடத்துவது மட்டும்தான். நான் பதவியில் இருக்கும்போது, என்னுடைய எதிரிகளை பலிகடா ஆக்கவில்லை. ஆனால் சில வழக்குகள் தவறாக கையாளப்பட்டன. அது குறித்து எனக்கு பிறகுதான் தெரியவந்தது’’ என்றார்.