கள்ளக்குறிச்சி அருகே சட்ட விரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறியும் ஸ்கேன் சென்டர் நடத்திய நபர் மீது சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் சாலை பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை என்பவரின் மகன் வடிவேல் (45). இவர், மலைக் கோட்டாலம் என்ற கிராமத்தில் சட்ட விரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என கண்டறியும் ஸ்கேன் சென்டர் நடத்தி வந்துள்ளார். இந்த தகவல் முதலமைச்சரின் தனிப்பிரிவு கவனத்திற்கு சென்றுள்ளது.
இவர், தொடர்ந்து பல ஆண்டுகளாக இதே தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், இவர் மீது பல வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் கூறப்படும் நிலையில். இன்று சென்னையிலிருந்து மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககம் சார்பில் டிஎஸ்பி சரவணகுமார் மற்றும் இளநிலை நிர்வாக அலுவலர் கமலக்கண்ணன் அலுவலக கண்காணிப்பாளர் சதீஷ் மற்றும் கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் சத்ய நாராயணன் ஆகியோர் வடிவேல் நடத்திவரும் ஸ்கேன் சென்டருக்கு வந்து ஆய்வு செய்தனர்.
ஆய்வில் இங்கு சட்டவிரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என கண்டறியும் கருவியை கொண்டு தொழில் செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து ஸ்கேன் கருவியை கைப்பற்றி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்கேன் கருவியை எளிதில் வாங்கிவிட முடியாது என்ற நிலையில் வடிவேல் இந்த கருவியை சட்டவிரோதமாக வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள ஸ்கேன் மெஷின், ரூ.80 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை சுகாதாரத் துறையினர் கைப்பற்றியதுடன் வடிவேலை கள்ளக்குறிச்சி காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். பத்தாம் வகுப்பு மட்டுமே படித்து விட்டு மருத்துவர் எனக்கூறிக் கொண்டு சொகுசு காரில் வலம்வரும் வடிவேல் இன்று வசமாக சிக்கிக் கொண்டுள்ளார். இந்த தொழிலில் ஈடுபட்டு வரும் மேலும் பலர் பற்றிய தகவல்களை வடிவேலுவிடம் சுகாதாரத் துறையினர் திரட்டி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM