ஐதராபாத்: மத்தியில் 3வது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தெலுங்கானா ராஷ்ட்ரீய சமீதி கட்சி தலைவரும், தெலுங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ், கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மத்தியில், பா.ஜ., மற்றும் காங்கிரசுக்கு மாற்றாக 3வது அணி அமைக்கும் முயற்சியில் சந்திரசேகர ராவ் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர், இரு கட்சிகளையும் சாராத மாநில முதல்வர்களை சந்தித்து பேசி வரும் அவர், தனது கட்சியை தேசிய கட்சியாக மாற்றும் திட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. அக்கட்சிக்கு பாரத் ராஷ்ட்ரீய சமீதி எனவும் பெயர் சூட்டவும் திட்டமிட்டுள்ளார்.
ஒரு கட்சி , தேசிய அந்தஸ்து பெற வேண்டும் என்றால், நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் 6 சதவீத ஓட்டுகளை பெற வேண்டும் என்பது விதி. அப்படி அந்தஸ்து கிடைத்து விட்டால், நாடு முழுவதும் அக்கட்சிக்கு ஒரே சின்னம் பெற முடியும்.
இந்நிலையில், சந்திரசேகர ராவ், குஜராத், கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஆந்திரா, உ.பி., டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை அல்லது 2024 லோக்சபா தேர்தலில் போட்டியிட தகுதி வாய்ந்த வேட்பாளர்களை கண்டறியும்படி தனது கட்சி மூத்த தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. அந்த மாநிலங்களில் தெலுங்கு பேசும் மக்களின் ஓட்டை அறுவடை செய்து, அங்கு தனது கட்சியை தடம் பதிக்க வைக்க சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இது குறித்து அக்கட்சி நிர்வாகிகள் கூறுகையில், கர்நாடகா, ஹிமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு விரைவில் அடுத்தடுத்து சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதில், குஜராத் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் போட்டியிட சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ளார்.
நெசவாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தெலுங்கு பேசும் மக்கள், குஜராத்தில் சூரத் மற்றும் ஜவுளி தொழில் நிறைந்த மாவட்டங்களில் வசித்து வருகின்றனர்.
கர்நாடகாவில் எல்லையில் அமைந்துள்ள ராய்ச்சூர், பிதர், கல்புர்கி மற்றும் பெங்களூருவில் வேட்பாளர்களை நிறுத்தும் எண்ணமும் சந்திரசேகர ராவிடம் உள்ளது. பெங்களூருவில் ஆயிரகணக்கான தெலுங்கு பேசும் மக்கள் வசித்து வருகின்றனர். தெலுங்கானாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொறியாளர்கள் அங்கு பணியாற்றுகின்றனர்.
டில்லியிலும் ஏராளமான தெலுங்கு பேசும்மக்கள் உள்ளனர்.
மஹாராஷ்டிராவுடன், தெலுங்கானாவின் காமரெட்டி, சங்கரரெட்டி, நிசாமாபாத், அடிலாபாத், அசிபாபாத் உள்ளிட்ட மாவட்டங்கள் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. மஹாராஷ்டிராவின் நந்தத் மாவட்டத்தை சேர்ந்த தலைவர்கள் எங்களது கட்சி சார்பில் போட்டியிட அனுமதி கேட்டு வருகின்றனர் என்றார்.
சரத் யாதவுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் சந்திரசேகர ராவ், வரும் லோக்சபா தேர்தலில் டில்லி மற்றும் உ.பி.,யில் விவசாய சங்க தலைவர்கள், முன்னாள் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு சீட் தரவும் திட்டமிட்டுள்ளார்.
கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் முன்னாள் அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த தலைவர்களை டில்லியில் களமிறக்கியது. அது அக்கட்சிக்கு பெரிதும் பலன் கொடுத்துள்ளது. அரசியலில் நடுநிலையாளர்களை மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்கிறார் அக்கட்சி எம்.பி., ஒருவர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்