கள்ளக்குறிச்சி: சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வலைதளத்தில் சில கருத்துகளை தெரிவித்ததாக மூத்தப் பத்திரிகையாளர் சாவித்திரிக் கண்ணன் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார் விசாரணைக்காக சென்னை சாஸ்திரி நகரிலிருந்து, விழுப்புரம் மாவட்டம் ஓலக்கூரில் அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து விசாரணை நடத்திய போலீசார் மாலையில் விடுவித்தனர்.
சென்னை சாஸ்திரி நகரில் வசித்துவந்த மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் (57) வீட்டிற்கு சீருடை அணியாத காவல் துறையினர் சென்று, அவரிடமிருந்து செல்போனை பறித்து, அவருடைய மனைவியின் செல்போனையும் வாங்குவதற்கு முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர், அவரை சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்கிறோம் என்று அவர் மனைவியிடம் கூறிவிட்டு, கிழக்குக் கடற்கரைச் சாலையில் காரை வழியாக அவரை விழுப்புரம் மாவட்டம் ஓலக்கூருக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவரை போலீஸார் அழைத்துச் சென்ற செய்தியறிந்து பல்வேறு அமைப்புகளும், சில அரசியல் கட்சியினரும், அரசுக்கு கண்டனங்களை தெரிவித்து, விடுவிக்க வலியுறுத்தினர்.
இதைத்தொடர்நதது, சைபர் கிரைம் போலீஸாரின் விசாரணைக்குப் பின் மாலையில் அவர் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, அவர் நடத்திவரும் அறம் வலைதளப் பக்கத்தில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்தபோது எழுதி வைத்த கடிதம் தொடர்பாக சிலவற்றை பதிவிட்டிருந்தார். அதுதொடர்பான விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்தனர்.