காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் – சசி தரூர் உட்பட 5 எம்.பி.க்கள் கடிதம்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று சசி தரூர் உட்பட 5 எம்.பி.க்கள் கட்சியின் தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வரும் 22-ம் தேதி வெளியாகிறது. 24-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி 30-ம் தேதி நிறைவடைகிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற அக்டோபர் 8-ம் தேதி கடைசி நாள்.

போட்டி ஏற்படும் நிலையில் அக்டோபர் 17-ம் தேதி டெல்லியில் வாக்குப்பதிவு நடைபெறும். சுமார் 9,000 நிர்வாகிகள் வாக்களிப்பார்கள். அக்டோபர் 19-ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும். இந்த சூழலில் காங்கிரஸ் எம்.பி.க்கள் சசி தரூர், மணீஷ் திவாரி, கார்த்தி சிதம்பரம், பிரதியுத் போர்டோலாய், அப்துல் காலிக் ஆகியோர் கட்சியின் தேர்தல் அதிகாரி மதுசூதன் மிஸ்திரிக்கு கடந்த 6-ம் தேதி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிக்க தகுதியான வாக்காளர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். குறிப்பாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, வாக்காளர்கள் குறித்த விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு மாநிலமாக சென்று அந்தந்த மாநிலங்களின் வாக் காளர்களை, வேட்பாளர்களால் அறிந்து கொள்ள முடியாது. கட்சித் தலைவர் தேர்தலை வெளிப்படையான, நேர்மையான முறையில் நடத்த வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மதுசூதன் மிஸ்திரி கூறும்போது, “காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டி யலை பொது அரங்கில் வெளியிட முடியாது. அது கட்சி விதிகளுக்கு எதிரானது. எனினும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்காளர் பட்டியல் வழங்கப்படும். கட்சி தலைவர் தேர்தல் வெளிப்படையாக நடத்தப்படும்” என்றார்.

ராகுல் காந்திக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய குலாம் நபி ஆசாத் உட்பட பல்வேறு தலைவர்கள் காங்கிரஸில் இருந்து வெளியேறி உள்ளனர். தற்போது தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 5 காங்கிரஸ் எம்.பி.க்கள் கடிதம் அனுப்பியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.