சின்னத்திரையில் அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்த வடிவேல் பாலாஜி மறைந்து இரண்டாண்டுகள் கடந்து விட்டன. 2020 செப்டம்பர் 11ல் தான் அவரது உடல் எரியூட்டப்பட்டது.
வடிவேல் பாலாஜியின் மறைவுக்குப் பிறகு அவரது குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்படுவதாகச் சமூக ஊடகங்களில் சில தகவல்கள் பரவ, சென்னை சேத்துப்பட்டில் வசித்து வரும் வடிவேல் பாலாஜியின் மனைவி ஜோதியையே தொடர்பு கொண்டு பேசினோம்.
‘’அவர் இறந்தப்ப வாடகை வீட்டுல குடியிருந்தோம். தொடர்ந்து வாடகை செலுத்த முடியாத சூழல்ல இருந்ததைப் பார்த்து, விஜய் டிவியில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை தந்தாங்க. அந்தப் பணத்தை வச்சு ஒரு வீட்டை லீசுக்கு எடுத்து இப்ப அந்த வீட்டுலதான் இருக்கோம்.
நடிகர் சிவகார்த்திகேயன் அவர் இறந்தப்ப ஆறுதலாப் பேசினார். “இனி உங்க குழந்தைங்க படிப்பைப் பத்திக் கவலைப்படாதீங்க. அதுக்கான செலவை நான் ஏத்துக்கறேன்னு சொன்னார். அதேபோல என் மகன், மகளின் படிப்புச் செலவை அவர் பார்த்துக்கறார். பையன் 12-வதும் பொண்ணு 8-வதும் படிக்கிறாங்க.
ஈரோடு மகேஷ் எங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, மளிகை சாமான்களை மாசா மாசம் தொடர்ந்து வாங்கித் தந்திடுறார்.
அதேபோல புகழ் அடிக்கடி வந்து எங்களைப் பார்த்துட்டுப் போறார். தன்னுடைய கல்யாணத்துக்கு எங்க வீட்டுல எல்லோருக்கும் டிரஸ் எடுத்துக் கொடுத்துக் கூப்பிட்டார். போயிட்டு வந்தோம்.
பேர், புகழ் இருந்தென்ன, காசு பணத்தைச் சேர்த்து வைக்காமப் போயிட்டாரேனு வீட்டுல எல்லாருக்குமே அவர் மேல வருத்தம் இருந்தது. ஆனா இந்த மாதிரி நல்ல ஆளுங்களைச் சம்பாதிச்சு வச்சுட்டுப் போயிருக்கார்ங்கிறது கொஞ்சம் ஆறுதலா இருக்கு. இவங்களுடைய உதவி இல்லைன்னா எங்க நிலைமை ரொம்பவே மோசம் ஆகியிருக்கும்கிறதுதான் நிஜம். அவங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி.’’ என நெகிழ்ந்தார் ஜோதி.