காங்கிரஸ்
கட்சியை விட்டு கடந்த மாதம் 26ம் தேதி விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்னும் 10 நாட்களில் புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பாரமுல்லா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய குலாம் நபி ஆசாத், “இன்னும் 10 நாட்களில் கட்சியின் பெயர் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
முன்னதாக குலாம் நபி ஆசாத் நேற்று அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டி இருந்தார். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜம்மு பிராந்தியத்தின் 35 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டதாகவும், தான் ஆரம்பிக்க உள்ள கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க அவர்கள் விருப்பம் தெரிவித்ததாகவும் தெரிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது தனக்கு இருந்த ஆதரவைக் காட்டிலும் தற்போது 4 மடங்கு ஆதரவு பெருகி இருப்பதாகவும் அவர் கூறினார்.
தான் அறிவிக்க உள்ள கட்சியின் பெயர் உருது வார்த்தைகளைக் கொண்டதாகவோ அல்லது சமஸ்கிருத வார்த்தைகளைக் கொண்டதாகவோ இருக்காது என்றும், மக்கள் அனைவருக்கும் புரியும்படியான இந்திய பெயராக அது இருக்கும் என்றும் கூறி இருந்தார். மேலும், ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை பெற்றுத் தருவது, ஜம்மு காஷ்மீர் மக்களுக்கான நில உரிமையை மீட்டுத் தருவது, மாநில மக்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவது ஆகியவற்றில் தனது புதிய கட்சி கவனம் கொடுக்கும் என குலாம் நபி ஆசாத் கூறினார்.