திருமணத்திற்கு பின்னும் வழக்கம்போல் கிரிக்கெட் விளையாட அனுமதி அளிக்க வேண்டும் என மணப்பெண்ணிடம் மணமகனின் நண்பர்கள் ஒப்பந்தம் போட்டது வைரலாகி வருகிறது.
கடந்த காலங்களில் திருமண விழாக்களில் மணமக்களின் உறவினர்கள் நண்பர்கள் வாழ்த்து அட்டை அடித்து சாக்லெட் பின் பண்ணி கொடுப்பது, போஸ்டர் ஒட்டுவது, பிரமாண்ட பிளக்ஸ் வைப்பது என பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்கள்.
இன்னும் சிலர் திருமணத்துக்கு வருகின்றவர்களுக்கு மரக்கன்று, விதைகள் வழங்குவது, நூல்கள் கொடுப்பது, பாரம்பரிய உணவுகளுடன் விருந்து வைப்பது, மொய்ப்பணத்தை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்குவது, எளிய மக்கள் வாழும் பகுதிக்கு சென்று உணவு வழங்குவது என சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருமண விழாக்களை நடத்தி வருகிறார்கள்.
அதே நேரம் தங்கள் கற்பனை மற்றும் நகைச்சுவை திறனை வெளிப்படுத்தும், தாங்கள் செய்யும் வேலை, தொழிலை வெளிப்படுத்தும் வகையில் மாத்திரை அட்டை போல, ரயில், விமான டிக்கெட், ஆதார், வாக்களர் அட்டை, ஏடிஎம் அட்டை போல அழைப்பிதழ் அடித்து இணையம் மூலம் வைரலாக்கி வருகிறார்கள்.
அதுபோலத்தான் இணையவாசிகள் உற்று கவனிக்கும் வகையில் உசிலம்பட்டியில் ஹரிபிரசாத்- பூஜா திருமணம் நடந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கீழப்புதூரை சேர்ந்த கல்லூரி விரிவுரையாளர் ஹரிபிரசாத், அப்பகுதியில் செயல்படும் சூப்பர் ஸ்டார் கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார்.
இவர் திருமணத்துக்கு வந்த நண்பர்கள், திடீரென்று மணமேடையில் ஏறி ‘திருமணம் முடிந்தாலும் எப்போதும்போல் எங்களுடன் கிரிக்கெட் விளையாட அனுமதி அளிக்க வேண்டும்’ என்று மணமகளிடம் பத்திரைத்தை காட்டி கையெழுத்திட வலியுறுத்தினார்கள்.
முதலில் அதிர்ச்சியாகவும் பின்பு ஜாலியாகவும் எடுத்துக்கொண்ட மணமகள் பூஜா, ‘வாரத்தில் சனி, ஞாயிறுகளில கிரிக்கெட் விளையாட செல்ல சம்மதம்’ என்று ஒத்துக்கொண்டு எழுதப்பட்ட பத்திரத்தில் கையெழுத்திட்டார்.
நண்பனின் திருமண விழாவை கிரியேட்டிவான ஐடியா மூலம் பரபரப்பாக்கி உள்ளார்கள் உசிலம்பட்டி இளைஞர்கள்.
சமூக ஊடகங்களில் இந்த செய்தியை பார்த்துவிட்டு மணமான பலர் ‘ஆஹா என் நண்பர்களுக்கு இந்த ஐடியா தெரியாமல் போச்சே..’ என்றும், ‘திருமணத்துக்குப்பி பல பிடித்த விளையாட்டுகளை விளையாட முடியவில்லை’ என்றும், ‘திருமணத்துக்குப்பிம் நண்பர்களை மிஸ் செய்வது உண்மைதான்’ என்று ஃபீலிங்குடனும் ‘எல்லாம் பப்ளிடசிட்டி’ என்று கிண்டலடித்தும் பலர் கமென்ட் செய்துவருகின்றனர்.